ஜெனீவா பரிந்துரைகளை இலங்கை நிராகரித்தால் மாற்று தீர்வு என்ன? – ஐ.நா. கேள்வி

263 0

ஜெனீவா பிரேரணை பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் நிராகரிக்குமாக இருந்தால், அவற்றுக்கு பதிலாக முன்வைக்கவுள்ள மாற்று பொறிமுறைகள் என்ன என்று ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கேள்வியெழுப்பியுள்ளது.

மனித உரிமைகள் பேரவையின் சட்ட சமத்துவ மற்றும் பாரபட்சத்தை தகர்க்கும் பிரிவின் பிரதானி மோனா சிஷ்மாவி இதனை தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

2015ஆம் ஆண்டு மனித உரிமைகள் பேரவை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணையின் பரிந்துரைகளை அமுலாக்குவதற்கு, இலங்கைக்கு தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் நீதித்துறைக்கு அமைய சில விடயங்களுக்கு தடை நிலவுவதாகவும் எனவே 30/1 பிரேரணையின் பரிந்துரையில் வெளிநாட்டு உதவிகளை பெற்றுக்கொள்ள முடியுமென குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால் இதனை இலங்கை மறுக்குமாக இருந்தால் அதற்கு மாற்றுத் திட்டம் என்ன என்பதை குறிப்பிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நீதிபதிகளின் தேசியம் குறித்து அவதானம் செலுத்துவது முக்கியமில்லை என குறிப்பிட்ட அவர், பொறுப்புக்கூறல் விடயத்தை எவ்வாறு தடைநீக்கி முன்னெடுக்க முடியும் என்பது குறித்த அவதானமே முக்கியமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.