நீதிக்கட்டமைப்பில் மாற்றம் வேண்டும் – திலக் மாரப்பன

266 0

குற்றங்களை துரிதமாக விசாரணைக்குட்படுத்தும் வகையில், நீதிக்கட்டமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “குற்றவாளிகளுக்கு எதிராக நீதி நிலைநாட்டப்படுவதில், எமது நாட்டில் பாரிய தாமதம் காணப்படுகிறது. குற்றம் தொடர்பான தீர்ப்பு 10 வருடங்கள் கழித்தே வருகிறது.

ஒரு குற்றவாளிக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றம் விசாரணைக்கு உட்படுத்த மட்டும், 2 அல்லது 3 வருடங்கள் தேவைப்படுகின்றன. இதுபோல், ஏனைய நாடுகளில் நடக்குமா என்பது உண்மையில் சந்தேகமே.

போதைப்பொருள் குற்றவாளிகள் முதல் சிறிய குற்றங்களை செய்த குற்றவாளிகள்வரை அனைவருக்கும் இதே நிலைமைத்தான் காணப்படுகிறது. இது நீதிக்கட்டமைப்பின் பாரிய ஒரு குறையாகவே கருதப்படுகிறது.  இதனாலே குற்றங்களை விசாரணை செய்ய ஒரு கால வரையறையை நியமிக்க வேண்டும் என நாம் வலியுறுத்துகிறோம்.

ஒரு குற்றத்துக்கு எதிராக ஒரு வருடத்திலேயே விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டு, வழக்குத் தாக்கல் செய்யப்படவேண்டும்.  அதையும்மீறி, கால தாமதம் இடம்பெறுமானால் உயர்நீதிமன்றின் அனுமதியை பெறவேண்டும் என்ற கட்டமைப்பு கொண்டுவரப்பட வேண்டும்.

குறிப்பாக, போதைப்பொருள் குற்றங்களுக்கு எதிரான வழக்கு விசாரணைகளை ஒரு வருடத்திலேயே ஆரம்பிக்க வேண்டும். இதனை மேற்கொள்ளாவிட்டால் அனைத்து தரப்பினருக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. நேரம், பணம் என அனைத்தும் விரயமாக்கப்படுகிறது.

இதனாலேயே, வழக்கு விசாரணைகளை மேற்கொள்ள ஒரு கால வரையறையை வகுக்க வேண்டும் என்று நாம் வலியுறுத்துகிறோம்.  அவ்வாறு இல்லாவிட்டால், ஒரு வருடத்தில் சந்தேகநபரை விடுதலை செய்யவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.