இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதராக பதவி வகிக்கும் சொஹைல் மக்மூத் திடீரென மாற்றப்பட்டுள்ளார். இதை பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா மக்மூத் குரேஷி தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதராக பதவி வகிக்கும் சொஹைல் மக்மூத் திடீரென மாற்றப்பட்டுள்ளார். அவர் வரும் 16-ந் தேதி ஓய்வு பெறுகிற பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலாளர் தெஹ்மினா ஜான்ஜூவா இடத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
இதை பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா மக்மூத் குரேஷி முல்தான் நகரில் நேற்று நிருபர்களிடம் பேசுகையில் தெரிவித்தார். அப்போது அவர் கூறும்போது, ‘‘பிரதமர் இம்ரான்கானுடன் கலந்து பேசி, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலாளராக இந்திய தூதர் சொஹைல் மக்மூத் நியமிக்கப்பட்டுள்ளார். இதையொட்டி அவருடன் தொலைபேசியில் பேசி எனது வாழ்த்துக்களை தெரிவித்தேன். அவரது பரந்த அனுபவம் எனக்கும் கூட உதவி இருக்கிறது’’ என கூறினார்.
சொஹைல் மக்மூத், 2017-ம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் முதல் இந்தப் பதவியில் இருந்து வருகிறார். அதற்கு முன்பாக அவர் அமெரிக்காவில் வாஷிங்டன்னிலும், நியூயார்க்கிலும் பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவுக்கான பாகிஸ்தானின் புதிய தூதர் யார் என்பது பற்றி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என தகவல்கள் கூறுகின்றன.