பா.ம.க.வினர் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதால் போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என திருமாவளவன் சார்பில் டி.ஜி.பி.யிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தனக்கு பாதுகாப்பு கேட்டு கடந்த சில வருடங்களுக்கு முன்பு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
2015, 2016, 2017-ம் ஆண்டுகளில் நடந்த தஞ்சாவூர், பாலக்கோட்டை கிராமத்தில் கொடியேற்று நிகழ்ச்சியில் பங்கேற்ற போது திருமாவளவன் மீது நாட்டு வெடிகுண்டு தாக்குதல், வந்தவாசி தாலுகாவில் நடந்த நிகழ்ச்சியில் பா.ம.க.வினர் தாக்குதல் நடத்த முயற்சி செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் வி.சாத்தனூரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த போது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாகவும் குறிப்பிட்டு வழக்கு தொடர்ந்தார்.
அப்போது நீதிபதி இளந்திரையன் மனு மீது விசாரணை நடத்தி பாதுகாப்பு கேட்டு போலீஸ் டி.ஜி.பி.யிடம் முறையிட வேண்டும் என கூறி வழக்கை முடித்து வைத்தார்.
இந்த நிலையில் தற்போது பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதால் 40 தொகுதிகளுக்கும் பிரசாரம் செய்ய செல்ல வேண்டியது இருப்பதால் தனக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் எனக்கோரி உள்துறை செயலாளர், டி.ஜி.பி. மற்றும் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோருக்கு கடந்த மார்ச் மாதம் 19-ந் தேதி திருமாவளவன் சார்பில் மனு கொடுக்கப்பட்டது.
மேலும் சென்னை ஐகோர்ட்டிலும், பாதுகாப்பு கேட்டு அவர் சார்பாக வக்கீல் பாலகிருஷ்ணன் மனுதாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெறுகிறது.
டி.ஜி.பி.யிடம் திருமாவளவன் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறி இருப்பதாவது:-
சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் தான் போட்டியிடுவதால் தொகுதி முழுவதும் சென்று மக்களை சந்திக்க வேண்டியுள்ளது. இது தவிர கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்தும் பிரசாரம் செய்ய 40 தொகுதிகளுக்கும் செல்ல இருப்பதால் பிரசாரத்தில் ஈடுபடும் போது போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்.
ஏற்கனவே தாக்குதல் முயற்சி நடந்து இருப்பதால் தேர்தல் பிரசாரத்தில் எளிதாக புகுந்து வன்முறையை தூண்ட வாய்ப்பு உள்ளது. அதனால் முழுமையான பாதுகாப்பு அளிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.