கோட்டாவை வீழ்த்துவது ஐ.தே.க.விற்கு சவால் இல்லை – சரத்

278 0

மஹிந்த ராஜபக்ஷவையே வீழ்த்திய ஐக்கிய தேசியக் கட்சிக்கு, கோட்டாபய ராஜபக்ஷவை வீழ்த்துவதெல்லாம் ஒரு சவாலே இல்லை என்று அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

மேலும், ஐக்கிய தேசியக் கட்சி சார்பில், ஜனாதிபதி தேர்தலில் களமிறங்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே சிறப்பான வேட்பாளர் என்றும் இவரைத் தவிற சிறந்தத் தலைமைத்துவம் கட்சியில் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

களனியில் இடம்பெற்ற நிகழ்வொன்றையடுத்து, ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “ராஜபக்ஷ குடும்பத்திலிருந்துதான் அடுத்த ஜனாதிபதித் தேர்தலின்போது வேட்பாளர் வருவார் என்பதை நான் என்றோ அறிவேன். அந்தத் தரப்பினர், இன்னும் குடும்ப ஆட்சியைக் கைவிடவில்லை.

ராஜபக்ஷ குடும்பத்தின் பிரதான நபரையே தோற்கடித்த ஐக்கிய தேசியக் கட்சிக்கு, அந்தக் குடும்பத்திலிருந்து இன்னொருவர் வருவது பெரிய சவாலாக இருக்காது.

அவரைத் தோற்கடிப்பதற்கான நடவடிக்கைகளையும் ஐக்கிய தேசியக் கட்சி எடுக்கும். ஒருவேளை ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர் கோட்டாபய ராஜபக்ஷ சிறைக்கேதும் சென்று விட்டால், அதுதான் பாரிய சவாலாக அமையும்.

கோட்டாபய ராஜபக்ஷ மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை வைத்துதான் இதனைக் கூறுகிறேன். எவ்வாறாயினும், அடுத்த ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சி இன்னும் ஒரு தீர்மானத்துக்கு வரவில்லை.

ஆனால், தேர்தல் காலத்தின்போது, தலைவரை ஓரம்கட்டி இன்னொருவரை அழைத்து வந்து வெற்றிப் பெற வைத்த கடந்த கால தவறை மட்டும் இந்தமுறை செய்ய மாட்டோம் என்பதில் மட்டும் உறுதியாக இருக்கிறோம்.

இதனை மேற்கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. ஒருவேளை, அனைவரும் இணக்கம் வெளியிட்டால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எமது ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவார்.

எமது கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இதற்கு எதிர்ப்பினை வெளியிடுகிறார்கள். அவ்வாறாயின், பிரதமரை விட சிறந்த தலைவர் ஒருவரையே நாம் தேர்தலில் களமிறக்க வேண்டும்.

எனினும், அவ்வாறான ஒருவர் எமது கட்சியில் இப்போது இருக்கிறார் என்று நான் கருதவில்லை. கருஜயசூரியவுக்குக் கூட அதற்கான சிறப்புத் தகுதி இருப்பதாகத் தெரியவில்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.