நாமக்கல் அருகே இன்று அதிகாலை போலீசார் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணம் இல்லாததால் ரூ.3½ கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
நாமக்கல் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தலையொட்டி பறக்கும் படை அதிகாரிகள், நிலையான கண்காணிப்பு குழுவினர் சோதனை நடத்தி வருகின்றனர். உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் பணம், நகைகள் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் நாமக்கல் அருகே உள்ள கீரம்பூர் சுங்கச்சாவடியில் தேர்தல் நிலையான கண்காணிப்பு குழு அதிகாரி செங்கோடான் தலைமையில் போலீசார் இன்று அதிகாலை சோதனை நடத்திக் கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக சேலத்தில் இருந்து மதுரையை நோக்கி ஆம்னி வேன் வந்தது. இந்த வேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் ரூ.3½ கோடி மதிப்புள்ள 8 கிலோ தங்க நகைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த தங்க நகைகள் மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நகைக் கடைகளில் கொடுப்பதற்காக ஒரு தனியார் கூரியர் ஏஜென்சி நிறுவனம் மூலமாக மதுரையை சேர்ந்த சண்முகராஜா தலைமையில் வேனில் கொண்டு வரப்பட்டது. அவர் சுமார் 7 கிலோ தங்க நகைகளுக்கான ஆவணங்கள் மட்டுமே வைத்திருந்ததாக தெரிகிறது. 1 கிலோ கூடுதலாக கொண்டு செல்லப்படுவது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி 8 கிலோ தங்க நகையையும் பறிமுதல் செய்து தேர்தல் உதவி அலுவலர் தேவிகாராணியிடம் ஒப்படைத்தனர். அதன் பிறகு தேவிகாராணி, நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் முன்னிலையில் 8 கிலோ தங்கத்தையும் ஒப்படைத்தார்.
இதனை தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வேனில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.