வடக்கு கிழக்கு மக்களின் அரசியல் கோரிக்கைகளுக்கு மலையைத் தமிழர்கள் பூரண ஆதரவை வழங்குவார்கள் என கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஸ்னன் தெரிவித்துள்ளார். கொக்குவில் இந்துக்கல்லூரியின் பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், கடந்த பத்து நாட்களாக மலையகத் தமிழர்கள் தமது சம்பளத்தினை 1000ம் ரூபாயாக உயர்த்தக் கூறி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர். அதற்கு ஆதரவாக வடக்கிலும் போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டதை பத்திரிகை வாயிலால் அறிந்ததும் என் மனம் நெகிழ்ந்தது. இவ்வாறு நாம் மொழியினால் ஒன்றுபட்டு எமக்குள் இருக்கும் வேற்றுமைகளை களையவேண்டும்.
நாம் வடக்கு கிழக்கில் இருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்களோடு ஒன்றுசேர்ந்து எமது கோரிக்களை வலுப்படுத்த வேண்டும். பூரண அதிகாரம் வேண்டும் என தமிழராகள் போராடிவருகின்ற நிலையில், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இந்த மக்களினுடைய அரசியல் பின்னடைவுகளை முன்னெடுத்துச் செல்லும் வகையில் இந்த அரசியல் தீர்வு கிடைக்க வேண்டும். இதற்காக மலையக மக்கள் எப்பொழுதும் உறுதுணையாக நிற்பார்கள் என சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
மலையகத்தில் இருந்தாலும் வடக்கு கிழக்கு மலையகம் என்று பிரித்து பார்ப்பதில்லை. எல்லா மாகாணத்தையும் சமமாக மதிக்கின்றேன். அனைவருக்கும் என்னால் பெற்றுக் கொடுக்கக்கூடியவற்றை எல்லாம் பெற்றுக்கொடுக்கின்றேன்.
தற்போது வடக்கு கிழக்கில் தொண்டராசிரியர் பிரச்சினை காணப்படுகிறது. யுத்த சூழலிலும் பணியாற்றிய தொண்டராசிரியருக்கு நியமனம் வழங்க வேண்டும். அது தொடர்பாகவும் கலந்துரையாடவுள்ளேன். மேலும் அண்மையில் கடமை நிறைவேற்று அதிபர்களும் ஒருபோராட்டதிலே ஈடுபட்டிருந்தனர். 2400 புதிய அதிபர்கள் நாடளாவிய ரீதியில் தெரிவுசெய்யப்பட்டனர். அவர்களுக்கு உரிய பாடசாலைகளுக்கு நியமனங்கள் வெகுவிரைவில் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.