தமிழக அரசின் நிர்வாகம் சீராக செயல்பட பொறுப்பு முதல்வரை தேர்வு செய்ய வேண்டும் என்று தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறினார்.தஞ்சாவூர் செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
காவிரி நதி நீர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அமைத்த நிபுணர் குழுவினர் தமிழகத்தில் ஆய்வு செய்ய வந்துள்ள நிலையில் தமிழக அரசின் சார்பில் அவர்களை சந்திக்க எந்த அதிகாரிகளும் அறிவிக்கப்படவில்லை.ஆய்வு குழுவை சந்திக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகள் கோரிக்கை வைத்து உள்ளனர். தமிழகத்துக்கு வந்துள்ள காவிரி உயர்மட்ட குழு தமிழக விவசாய சங்கங்களை கலந்து ஆலோசிக்கவில்லை.
நான் ஏற்கனவே தஞ்சையில் உண்ணாவிரதம் இருந்த போது எடுத்து வைத்த அம்சம் என்னவென்றால் நியாயமாக ஆளுகிற கட்சி தான் அனைத்து கட்சி கூட்டத்தையும், சட்டமன்ற சிறப்பு கூட்டத்தையும் கூட்ட வேண்டும் என்று சொல்லி இருக்கிறேன்.இங்கு இருக்கிற அனைத்து கட்சி தலைவர்கள், விவசாய பிரதிநிதிகளை அழைத்து டெல்லி சென்று பிரதமருக்கு அழுத்தம் தர வேண்டும் என்றே கோரிக்கையும் வைக்க இருக்கிறேன்.
அந்த பணியை இதுவரை தமிழக அரசு செய்வதற்கான முயற்சியில் ஈடுபடவில்லை என்பது வேதனையான ஒன்று.இது தொடரும் என்று சொன்னால் எதிர்க்கட்சியாக இருக்க கூடிய தி.மு.க. இதுகுறித்து பரிசீலித்து தலைவர் கலைஞருடன் ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி முடிவு எடுக்கப்படும்.
காவிரி விவகாரம் முல்லைப் பெரியாறு, பாலாறு பிரச்சினையை உள்பட பல்வேறு பிரச்சினைகள் தமிழகத்தை சூழ்ந்து உள்ள நிலையில் தமிழக அரசின் நிர்வாகம் சீராக செயல்பட பொறுப்பு முதல்வரை தேர்வு செய்ய வேண்டும். அல்லது துணை முதல்-அமைச்சரை உடனடியாக நியமிக்க வேண்டும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.