முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரியில் 18-வது நாளாக தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. அவர் மேலும் பல நாட்கள் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த மாதம் 22-ந்தேதி திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு டெல்லி எய்ம்ஸ் டாக்டர்கள் குழுவினர், டாக்டர் சிவகுமார் தலைமையிலான டாக்டர்கள் குழுவினர் ஆகியோர் லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலேவுடன் இணைந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். டாக்டர்களின் தொடர் சிகிச்சையால் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை பற்றிய விவரங்களை அப்பல்லோ மருத்துவமனை நேற்று வெளியிட்டு உள்ளது. முதல்-அமைச்சர் ஜெயலலிதா டாக்டர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ளார். அவருக்கு சீரான சுவாசம் தொடர்பாக டாக்டர்கள் மிக கவனமாக கண்காணித்து வருகிறார்கள்.
மேலும் நுரையீரல் தொற்று பாதிப்பை நீக்க தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அத்துடன் ஊட்டச்சத்து, பிசியோதெரபி உள்ளிட்ட சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருகின்றன.
இன்று 18-வது நாளாக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. அவர் மேலும் பல நாட்கள் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.