தமிழகத்திற்கு பொறுப்பு முதல்வரை நியமிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று திருநாவுக்கரசர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறினார்.முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதால் பொறுப்பு முதல்வரை நியமிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்து இருந்தார்.
இந்த கருத்துக்கு கூட்டணி கட்சியான காங்கிரஸ் மாற்று கருத்து தெரிவித்துள்ளது.சென்னை சத்தியமூர்த்தி பவனில் முன்னாள் முதல்-அமைச்சர் பக்தவச்சலம் பிறந்தநாள் விழா இன்று நடந்தது. இதில் கலந்து கொண்டு அவரது உருவப் படத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் மாலை அணிவித்தார்.
அப்போது அவரிடம் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ள கருத்து பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதில் அளித்து திருநாவுக்கரசர் கூறியதாவது:-பொறுப்பு முதல்வரை நியமிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறி இருப்பது அவரது கருத்து. ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருக்கும்.
அ.தி.மு.க.வை பொறுத்த வரை ஆளும்கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்த கட்சி. அதிகாரிகள், அமைச்சர்கள் பணியில் இருக்கிறார்கள்.பொறுப்பு முதல்வரை நியமிக்க வேண்டுமா? வேண்டாமா? என்பதை அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். பொறுப்பு முதல்வரை நியமிக்க வேண்டிய அவசியமில்லை.
அரசின் நிர்வாக பொறுப்பை கவர்னர், மூத்த அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், டி.ஜி.பி. ஆகியோர் கூட்டாக பொறுப்பு ஏற்று நடத்த வேண்டும்.சுப்பிரமணியசாமி தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமுல்படுத்த வேண்டும் என்று கூறி இருப்பது பா.ஜனதாவின் கருத்தா? அதை அந்த கட்சி ஏற்றுக் கொள்கிறதா? என்பதை தெளிவுப்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
ஏற்கனவே ராகுல் திடீரென்று சென்னை வந்து முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நலம் பற்றி விசாரித்து சென்றது அரசியல் பரபரப்பை உருவாக்கியது.தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் மாற்றம் ஏற்படலாம் என்று பேசப்பட்டது. இந்த நிலையில் தற்போது திருநாவுக்கரசர் மு.க. ஸ்டாலின் கருத்தை மறுத்து இருப்பதன் மூலம் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.