சிரியா நாட்டின் அலெப்போ பகுதியில் நடைபெற்றுவரும் விமான தாக்குதல்களுக்கு முடிவுகட்டி, அங்கு போர்நிறுத்தத்தை ஏற்படுத்தவும், மனிதநேய அடிப்படையில் நிவாரணப் பொருட்களை அனுப்பிவைக்கவும் ஐ.நா. பாதுகாப்பு சபையில் பிரான்ஸ் கொண்டுவந்த தீர்மானத்தை வீட்டோ அதிகாரத்தால் ரஷியா முறியடித்தது.
சிரியா நாட்டில் அதிபர் பஷார் அல் ஆசாத் ஆதரவு படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே கடந்த 5 ஆண்டுகளாக சண்டை நடந்து வருகிறது. மிதவாத கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்காவும், அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு ரஷியாவும் ஆதரவு அளித்து வந்தன.
இந்த சண்டையில் சுமார் 3 லட்சம் பேர் கொல்லப்பட்டனர். ஏறத்தாழ 7 லட்சம் பேர் இடம்பெயர்ந்தனர். இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட 17 நாடுகளின் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி சண்டை நிறுத்தம் அறிவித்தனர்.ஆனாலும், அலெப்போ நகர் உள்ளிட்ட சில பகுதிகளில் மட்டும் இருதரப்பினரும் உடன்படிக்கையை மீறி மோதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிரியா முழுவதும் சண்டை நிறுத்தம் கொண்டு வருவது தொடர்பாக ஜெனிவாவில் அமெரிக்க வெளியுறவு மந்திரி ஜான் கெர்ரியும், ரஷிய வெளியுறவு மந்திரி செர்கெய் லாவ்ரோவும் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.
இருப்பினும் சிரியாவில் சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்த சில தினங்களில் மீண்டும் அதனை மீறி தாக்குதல்கள் நடத்தப்பட்டது. இதனையடுத்து, மீண்டும் சண்டை நிறுத்தம் கொண்டு வருவது குறித்து அமெரிக்கா, ரஷியா இடையில் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக இருந்தது.
ஆனால், இதுதொடர்பாக உடன்பாடு எட்டப்படாததால் சிரியா முழுவதும் சண்டை நிறுத்தம் கொண்டு வருவது தொடர்பான ரஷியா உடனான பேச்சுவார்த்தையை ரத்து செய்வதாக அமெரிக்கா நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது.இதுகுறித்து அமெரிக்க வெளியுறத்துறை செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி கூறுகையில், “இந்த முடிவு மிகவும் சாதாரணமாக எடுக்கப்பட்டது அல்ல. ரஷியா மற்றும் சிரியா கூட்டணி பொதுமக்கள் பகுதிகளில் தாக்குதல்களை நடத்தி வருகிறது. சிரியாவில் ஒரே இடத்தில் தாக்குதல்களை நடத்தாமல் இருப்பதை தவிர்க்க இருநாடுகளிடையே தகவல் தொடர்பு அமைப்பு தொடர்ந்து இயங்கும்” என்றார்.
இந்நிலையில், S-300 என்ற அதிநவீன ஏவுகணை ஏவுதளத்தை சிரியாவின் மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள டார்டஸ் துறைமுகத்துக்கு ரஷியா அனுப்பிவைத்துள்ளது. போர் பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தும் ரஷியாவின் இந்த நடவடிக்கைக்கு பிறநாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. சிரியாவில் அனைத்து தரப்பினரும் ஆயுதங்களை தூக்கி எறிந்துவிட்டு போர்நிறுத்தத்துக்கு உடன்பட வேண்டும்.
அலெப்போ பகுதியில் நடைபெற்றுவரும் விமான தாக்குதல்களுக்கு முடிவுகட்டி, அங்கு போர்நிறுத்தத்தை ஏற்படுத்தவும், மனிதநேய அடிப்படையில் நிவாரணப் பொருட்களை அனுப்பிவைக்கவும் ஐ.நா. பா என பிரான்ஸ் அரசின் சார்பில் இயற்றப்பட்ட தீர்மானம் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் நேற்று முன்வைக்கப்பட்டது.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் அங்கம்வகிக்கும் 15 நாடுகளில் 11 நாடுகள் இந்த தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தன. சீனா, அங்கோலா ஆகிய நாடுகள் நடுநிலை வகித்தன. ரஷியா, வெனிசுலா ஆகிய நாடுகள் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தன.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டுமானால் இந்த அமைப்பில் அங்கம்வகிக்கும் 9 நாடுகளின் ஆதரவு தேவை என்ற நிலையில் பிரான்ஸ் கொண்டுவந்த தீர்மானத்துக்கு அமோக ஆதரவு கிடைத்தது.எனினும், தனது வெட்டுரிமை அதிகாரத்தை (வீட்டோ பவர்) பயன்படுத்தி, இந்த தீர்மானத்தை ரஷியா முறியடித்தது. சிரியா விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் தாக்கல் செய்யப்பட்ட ஐந்து தீர்மானங்களை தனது வீட்டோ பவரால் ரஷியா முறியடித்துள்ளது, குறிப்பிடத்தக்கது.