அமெரிக்காவின் பெரும் செல்வந்தர்கள் பட்டியலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஐந்து தொழிலதிபர்கள் இந்த ஆண்டு இடம்பிடித்துள்ளனர்.உலகின் பெரும் செல்வந்தர்களை தரவரிசைப்படுத்தும் ‘போர்ப்ஸ்’ பத்திரிகை அமெரிக்காவின் 400 பெரும் செல்வந்தர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் தொடர்ந்து 23-வது முறையாக மைக்ரோசாப்ட் அதிபர் பில் கேட்ஸ் முதல் இடத்தை பிடித்துள்ளார். 81 பில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துகளுக்கு சொந்தக்காரராக இந்த சிறப்பிடத்தை பில் கேட்ஸ் தொடர்ந்து தக்கவைத்துள்ளார்.
இந்த பட்டியலில் அமெரிக்க குடியுரிமை பெற்ற இந்திய வம்சாவளியினரான சிம்போனி டெக்னாலஜி நிறுவனத்தின் நிறுவனர் ரோமேஷ் வத்வானி, சின்ட்டெல் நிறுவனத்தின் துணை நிறுவனரான பாரத் நீர்ஜா தேசாய், இண்டிகோ விமான நிறுவன அதிபரான ராகேஷ் கங்வால், தொழிலதிபர் ஜான் கபூர், சிலிகான் வேல்லி ஏஞ்சல் முதலீட்டு நிறுவனத்தின் அதிபரான கவிதார்க் ராம் ஸ்ரீராம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
சுமார் 3 பில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துகளுடன் ரோமேஷ் வத்வானி இந்த பட்டியலில் 222-வது இடத்தில் உள்ளார். 2.5 பில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துகளுடன் பாரத் நீர்ஜா தேசாய் 274-வது இடத்தில் உள்ளார். 2.2 டாலர் மதிப்புள்ள சொத்துகளுடன் ராகேஷ் கங்வால் 321-வது இடத்தில் உள்ளார்.2.1 பில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துகளுடன் ஜான் கபூர் 335-வது இடத்திலும், 1.9 பில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துகளுடன் கவிதார்க் ராம் ஸ்ரீராம் 361-வது இடத்திலும் வந்துள்ளனர்.