ஜெயலலிதா பெயரை சொல்லி பிரசாரம் செய்வதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
சென்னை சேப்பாக்கத்தில் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
‘தாயிற் சிறந்த கோவிலும் இல்லை’, என்பதற்கேற்ப ஜெயலலிதாவை முன்னிறுத்தி தேர்தல் பிரசாரம் செய்கிறோம். ‘தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை’ என்ற பழமொழிக்கேற்ப மு.க.ஸ்டாலின் நடக்கவில்லை. ‘கூடா நட்பு கேடாய் முடியும்’ என்று கருணாநிதி கூறினார். அவர் ‘கூடா நட்பு’ என்ற சொன்ன காங்கிரசுடனேயே, மு.க.ஸ்டாலின் கூட்டணி அமைத்துள்ளார். இது சந்தர்ப்பவாதம்.
‘தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றால் ஜெயலலிதா மரணம் குறித்த உண்மையை கண்டுபிடிப்போம்’, என்று மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்து வருகிறார். இது ஒரு மானங்கெட்ட செயல்.
எம்.ஜி.ஆர். அமெரிக்காவில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைபெற்றபோது, ‘எம்.ஜி.ஆர். உயிருடன் வந்தால் ஆட்சியை அவரிடம் ஒப்படைத்துவிடுவோம்’, என்று கூறி கருணாநிதி மக்களிடம் ஓட்டு கேட்டார். அவரது நாடகத்தை புரிந்துகொண்டு மக்கள் அவருக்கு தோல்வியை பரிசாக அளித்தனர்.
தந்தை எடுத்த ஆயுதத்தை மகனும் தற்போது எடுத்திருக்கிறார். பிரசாரத்தின்போது எங்கள் தலைவியை பற்றி பேசி ஓட்டு கேட்க தி.மு.க.வுக்கு என்ன உரிமை இருக்கிறது? தி.மு.க. ஆட்சிக்கு வரப்போவதில்லை. ஆட்டத்திலேயே இல்லாத தி.மு.க. இப்படி பேசுவது வேடிக்கையாக இருக்கிறது.
அரசியல் களத்தில் உண்மையான போட்டி அ.தி.மு.க.வுக்கும், தி.மு.க.வுக்கும் தான். அ.ம.மு.க. ஆட்டத்திலேயே கிடையாது. தமிழகத்தில் ஜெயலலிதாவின் அலை மட்டுமே வீசுகிறது. வேறு அலை கிடையாது. இந்த அலையில் சிக்கி எதிரிகள் மாண்டு போவார்கள்.
ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சமயம் அவரது உடலில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்தது. இந்தளவு நிலைமை மோசமானதை அவரை வீட்டில் இருந்து பார்த்துக்கொண்ட சசிகலா குடும்பத்தினர் கண்டுகொள்ளாதது ஏன்?, அவர்கள் என்ன செய்தார்கள்? எனவே அந்த கேள்விக்கு பதில் சொல்லவேண்டிய கட்டாயம் அந்த குடும்பத்துக்கு உண்டு.
இவ்வாறு அவர் கூறினார்.