புதிய அரசியல் யாப்பு உருவாக்கத்தில் ஒரே இலங்கையராக இருப்போம் எனக் கூறிவிட்டு கபடத்தனமாக பெரும்பான்மையின மதத்தை சிறுபான்மையின மக்கள் மீது திணிக்கும் செயற்பாடொன்றை நல்லாட்சி எனப்படும் அரசாங்கம் மறைமுகமாகத் திட்டமிட்டு வருவதாக தேசிய சகவாழ்வு மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி அரசு எனப்படுவது தமிழ், முஸ்லீம், சிங்கள மக்களுக்கு உரிய நாடாளுமன்ற மற்றும் மாகாண சபை பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அதுவே நல்லாட்சிக்கான சிறந்த எடுத்துக்காட்டு எனவும் தெரிவித்துள்ளார்.
இதனைவிடுத்து இனம், மதம் இல்லாமல் ஒரே இலங்கையராக செயற்படுவோம் என கூறுவது கபடத்தனமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புதிய தேர்தல் முறைமைக்கு அமைய தொகுதிகள் குறைக்கப்படுகின்றமை சிறுபான்மையினருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் ஒன்றாக இருக்கும் எனவும் இது தொடர்பாக சிறுபான்மையின மக்கள் விழிப்புணர்வுடன் செயற்படவேண்டுமெனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.