வரவு செலவு திட்ட வாக்கெடுப்பே தமிழ் தரப்பிற்கான இறுதி வாய்ப்பு-சிவசக்தி

280 0

இந்த அரசாங்கத்தில் தமிழ்த் தரப்புக்கு பேரம்பேசும் இறுதி சந்தர்ப்பமாக ஏப்ரல் ஐந்தில் நடைபெறவுள்ள வரவு செலவு திட்டம் மீதான வாக்கெடுப்பு அமையவுள்ளதாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

எனவே, இச்சந்தர்ப்பத்தை தமிழ் தலைமைகள் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக பயன்படுத்த வேண்டும் என பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”போர் நிறைவுக்கு வந்து ஒரு தசாப்தத்தினை தொடவுள்ள நிலையில் இன்னமும் இலங்கையின் சிறைச்சாலைகளில் தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.

2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின்போது இவர்களின் விடுதலையும் பிரதான பேசுபொருளாக இருந்தது. ஆனால் ஆட்சி மாறிய பின்னர் அந்த விடயத்தினை அழுத்தமாக பிடிப்பதற்கு தமிழ்த் தரப்புக்கள் தவறியே வந்துள்ளன.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு உறுதியான பதிலளிக்க வேண்டும் என்ற விடயத்தினை முன்வைத்து பேரம் பேசவேண்டும்.

இந்த சந்தர்ப்பத்தினை நழுவவிட்டால் எதிர்காலத்தில் கூட்டமைப்பினது எந்த ஒத்துழைப்பும் அரசாங்கத்திற்கு தேவைப்படாது. அதன் பின்னர் கூட்டமைப்பால் அரசாங்கத்தினை கிடுக்கிப்பிடிக்க முடியாது என்பதே யதார்த்தமாகும்” எனத் தெரிவித்தார்.