2 வாரத்துக்கு மெட்ரோ ரெயில் நேரம் அதிகரிப்பு

311 0

மெட்ரோ ரெயில் நேரம் 2 வாரத்துக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதிகாலை 4.30 மணி முதல் இரவு 11 மணி வரை ரெயில் ஓடும் என மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. #

சென்னை மாநகர போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காகவும், விரைவு பயணத்துக்காகவும் மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது.

கோயம்பேடு- ஆலந்தூர், சின்னமலை- விமான நிலையம் வரை உயர்மட்ட பாதையிலும், திருமங்கலம்- சென்ட்ரல், சைதாப்பேட்டை- விமான நிலையம் வரை சுரங்கப்பாதையிலும் மெட்ரோ ரெயில் சேவை நடந்து வருகிறது.

தினமும் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பயணிகள் வசதிக்காக 2 வாரத்துக்கு மெட்ரோ ரெயில் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதிகாலை 4.30 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரெயில் இயக்கப்படுகிறது.

இதுகுறித்து மெட்ரோ ரெயில் அதிகாரி கூறியதாவது:-

சென்னை மாநகர பயணிகள் வசதிக்காக மெட்ரோ ரெயில் சேவை இயக்கம் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 2 வார காலத்துக்கு அதிகாலை 4.30 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரெயில் ஓடும்.

மெட்ரோ ரெயில் நிலையங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தனியார் பாதுகாப்பு நிறுவனம் சார்பில் கூடுதல் காவலாளிகள் நிறுத்தப்பட்டு பயணிகளுக்கு பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.

அதிகாலை 4.30 மணி, 5 மணி, 5.30 மணி என அரைமணி நேரத்துக்கு ஒரு ரெயில் இயக்கப்படும். அதன் பிறகு பீக் அவர்சில் ஒவ்வொரு 7 நிமிடத்துக்கு ஒரு ரெயில் இயக்கப்படும். அதன்பிறகு சாதாரண நேரங்களில் 14 நிமிடத்துக்கு ஒரு ரெயில் இயக்கப்படும். ரெயில் நேரம் அதிகரிப்பு மூலம் விமான நிலையத்துக்கு செல்லும் பயணிகள் பெரிதும் பயன் பெறுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.