நிரவ் மோடி ஜாமீன் மனு மீது நாளை விசாரணை – இந்திய அதிகாரிகள் லண்டன் விரைந்தனர்

290 0

பஞ்சாப் நேஷனல் வங்கியை ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடி செய்த வைர வியாபாரி நிரவ் மோடி ஜாமீன் மனு மீது நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. 

பஞ்சாப் நேஷனல் வங்கியை ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடி செய்த வைர வியாபாரி நிரவ் மோடி லண்டனுக்கு தப்பிச்சென்று விட்டார். அவரை இந்தியாவிடம் ஒப்படைக்கக்கோரி விடுத்த வேண்டுகோளின்பேரில், அவர் சமீபத்தில் லண்டனில் கைது செய்யப்பட்டார். லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 29-ந் தேதிவரை (நாளை) காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டது.

நிரவ் மோடி தாக்கல் செய்த ஜாமீன் மனு, 29-ந் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. அதனால், சி.பி.ஐ., அமலாக்கத்துறை ஆகியவற்றை சேர்ந்த இணை இயக்குனர் அந்தஸ்து கொண்ட தலா ஒரு அதிகாரி, நேற்று லண்டனுக்கு புறப்பட்டு சென்றனர்.

நிரவ் மோடி மனைவி அமிக்கு எதிராக சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையின் நகல் மற்றும் இதர ஆதாரங்களையும் அவர்கள் எடுத்துச் சென்றனர். லண்டனில் அவர்கள் அந்நாட்டு அதிகாரிகளை சந்தித்து பேசுகிறார்கள். அப்போது, நிரவ் மோடிக்கு எதிரான ஆதாரங்களை எடுத்துரைக்க உள்ளனர்.