“கடத்தப்பட்ட 11 பேருக்கு என்ன ஆனது என்பதை கரன்னாகொட அறிந்திருந்தார்”

237 0

ஐந்து மாணவர் உள்ளிட்ட 11 பேர் கடத்தி, சட்ட விரோதமாக தடுத்து வைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதை, முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட பூரணமாக அறிந்திருந்த நிலையில், அவர்  அவ்விடயம் தொடர்பிலான விடயங்களை மூடி மறைத்துள்ளமை விசாரணைகளில் உறுதியாகியுள்ளதாக சி.ஐ.டி.யினர் நேற்று கோட்டை நீதிவானுக்கு அறிவித்தனர்.

கடற்படையின் முன்னாள் புலனாய்வு பிரதானியும் தற்போதைய ரியர் அத்மிரால் தர அதிகாரியுமான ஆனந்த குருகே,  கரன்னாகொடவின் ஆலோசகராக இருந்த  கொமாண்டர் உதயகீர்த்தி பண்டார,  முன்னாள் கிழக்கு கட்டளைத் தளபதி ரியர் அத்மிரால் துஷித் வீரசேகர உள்ளிட்டோரின்  வாக்கு மூலங்களை மையபப்டுத்தி  சி.ஐ.டி.யின்  சமூக கொள்ளை தொடர்பிலான விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா இதனை நீதிமன்றில் அறிவித்தார்.

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை வெள்ளை வேனில் கடத்திச் சென்று கப்பம் பெற்றுக்கொண்டு காணாமல் ஆக்கிய  சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நேற்று கோட்டை நீதிவான் ரங்க திஸாநயக்க முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.  இதன்போதே விஷேட மேலதிக விசாரணை அறிக்கையை மன்றில் சமர்ப்பித்த பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா இந்த விடயங்களை வெளிப்படுத்தினார்.