இதய சுத்தியுடன் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த அரசாங்கம் தவறியுள்ளது – பிமல்

293 0

இதய சுத்தியுடன் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த அரசாங்கம் தவறியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற இந்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘சிங்கள, தமிழ் அரசியல்வாதிகள் ஜெனீவாவை தேர்தல் பிரச்சார களமாக பயன்படுத்துகின்றனர்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் சிவாஜிலிங்கம் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்தநிலையில் அவர் ஜெனீவாவை தேர்தல் பிரச்சார களமாக பயன்படுத்துகின்றார்.

அவர் மாத்திரமல்ல சில சிங்கள அரசியல்வாதிகளும் ஜெனீவாவை தங்கள் தேர்தல் பிரச்சார களமாக பயன்படுத்துகின்றனர். இதுகுறித்து அவர்கள் வெட்கப்பட வேண்டும்.

அத்துடன், இதய சுத்தியுடன் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த அரசாங்கம் தவறியுள்ளது.

மார்ச், செப்டம்பர் மாதங்களில் சில அரசியல்வாதிகள் பரப்பரபாக பேசுகின்றனர். அதன்பின்னர் அதுகுறித்து அவர்கள் பேசுவதில்லை. மக்களின் மனித உரிமைகளை நாம் மதிக்க வேண்டும்.

இறுதி யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்துவற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும். மேலும், இனவாதத்தை காட்டி வாக்குபெற சிலர் முயற்சிக்கின்றனர்’ எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.