ஜனாதிபதி முறைமையை நீக்கும் முயற்சிக்கு தேர்தல் பயமே காரணம்-டலஸ்

241 0

தேர்தல் பயத்தினாலேயே தற்போது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கும் முயற்சிகள் இடம்பெற்று வருவதாக மஹிந்த ராஜபக்ஷ ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினரான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

மேலும், ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் தொடர்பில் ஒருங்கிணைந்த எதிரணியினரால், இன்னும் உத்தியோகபூர்வமாக முடிவுகள் எடுக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கொழும்பில், நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே டலஸ் அழகப்பெரும இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பது மற்றும் தேசிய அரசாங்கம் தொடர்பிலான பிரச்சினை நாட்டில் மீண்டும் எழுந்துள்ளது.

ராஜபக்ஷ குடும்பத்தினர் அனைவரும் ஒன்றிணைந்து ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் முடிவெடுத்து விட்டதாக ஊடங்களில் செய்தி வெளியானதைத் தொடர்ந்துதான், இந்த சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஒருங்கிணைந்த எதிரணியான நாமோ அல்லது மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தினரோ இன்னும் எந்தவொரு உத்தியோகபூர்வமான கருத்தையும் வெளியிடவில்லை.

அத்தோடு, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் மஹிந்த குடும்பத்தில் பிளவு ஏற்பட்டுள்ளதாகவும் சில ஊடங்களில் தெரிவிக்கப்படுகிறது.

ஆனால், பண்டாரநாயக்கவின் குடும்பத்தை பிரித்ததுபோல ராஜபக்ஷவின் குடும்பத்தை பிரிக்க எவராலும் முடியாது என்பதை நான் இங்குக் கூறிக்கொள்கிறேன்.

பசில் ராஜபக்ஷவின் தீவிர முயற்சியினால்தான், புதிய கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி, நாட்டில் தற்போது பிரதானக் கட்சியாக உருவெடுத்துள்ளது.

இந்த அச்சத்தினாலேயே தற்போது, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குமாறு கூறிவருகிறார்கள்.

எம்மைப் பொறுத்தவரை இந்த நாட்டுக்கு தேசிய அரசாங்கம் என்ற முறைமையானது, பாதகமான ஒன்றாகவே இருக்கிறது.

வர்த்தகம், கல்வி, அபிவிருத்தி என அனைத்துக்கும் இந்த முறையால் எந்தவொரு நன்மையும் கிடைக்கவில்லை.

இந்நிலையில், தோல்வி பயத்தின் காரணத்தினால்தான் அரசாங்கம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்கவும் தேசிய அரசாங்கத்தை நீடிக்கவும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது” என டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.