பிரெக்ஸிட் விவகாரம் தொடர்பாக நாட்டின் முக்கிய நெடுஞ்சாலைகளில் அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட பாதிக்கும் குறைவான வேகத்தில் வாகனங்களை மெதுவாக இயக்கி டிரைவர்கள் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ‘பிரெக்ஸிட்’ விவகாரம் தொடர்பாக அந்நாட்டு மக்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். அந்த வகையில் கார் மற்றும் லாரி டிரைவர்களில் ஒருபிரிவினர் ‘கோ ஸ்லோ’ என்ற நூதன போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர். அதாவது நாட்டின் முக்கிய நெடுஞ்சாலைகளில் அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட பாதிக்கும் குறைவான வேகத்தில் வாகனங்களை மெதுவாக இயக்கி தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
இதன் மூலம் பரபரப்பான நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, தேவையற்ற குழப்பங்களால் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறும் போலீசார், வாகனங்களை மெதுவாக இயக்கும் டிரைவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கின்றனர்.
அத்துடன், சரக்குகளை ஏற்றிச் செல்லும் லாரிகளும் மெதுவாக செல்வதால் பால், இறைச்சி, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் வினியோகத்தில் பாதிப்பு உண்டாகும் நிலை ஏற்படலாம் என கூறப்படுகிறது.