இலங்கை ரயில் சேவை வருடமொன்றுக்கு 6 பில்லியன் ரூபாய் நஷ்டத்தை எதிர்நோக்குகின்றது என எதிர்க்கட்சி உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
இந்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு மற்றும் துறைமுகங்கள், கப்பற்துறை அலுவல்கள் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சு மீதான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதம் இன்று இடம்பெற்றது.
இந்த குழுநிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே எதிர்க்கட்சி உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘இலங்கை விமானப்படைக்கு என தனி விமானநிலையத்தை அமைக்க ஜனாதிபதி – பிரதமர் கவனம் செலுத்த வேண்டும்.
மேலும் இன்று இலங்கை ரயில் சேவை வருடமொன்றுக்கு 6 பில்லியன் ரூபாய் நஷ்டத்தை எதிர்நோக்குகின்றது.
எனினும் பொதுமக்களுக்கு சேவையினை செய்ய வேண்டும் என்ற ஒரே காரணத்தினால் அரசாங்கம் இந்த சுமைகளை தாங்கிக்கொண்டு செயற்பட்டு வருகின்றது. எனினும் ரயில் சேவையில் மேலும் சிறப்பான வகையில் மக்களை சிரமப்படுத்தாத வகையில் செயற்பட வேண்டும்.
நான் அமைச்சராக இருந்த நேரத்தில் 200 ரயில் பெட்டிகளையும் 12 சிறப்பு ரயில் எஞ்சின்கள் புதிதாக பாவனைக்கு விடுத்தேன். இன்று அதனை கொண்டே அரசாங்கம் சேவைகளை வழங்கி வருகின்றது’ என தெரிவித்துள்ளார்.