ஐக்கிய அரபு அமீரகத்தில் பரவலாக ஆலங்கட்டி மழை பெய்தது. சாலையில் கிடந்த ஐஸ்கட்டிகளால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
ஐக்கிய அரபு அமீரக நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஆனால் புஜேரா, உம் அல் குவைன் மற்றும் ராசல் கைமா உள்ளிட்ட பகுதிகளில் இதுவரை இல்லாத வகையில் திடீரென்று ஆலங்கட்டி மழை பெய்தது.
பொதுவாக வானில் இருந்து மழைத்துளிகள் ஐஸ்கட்டிகளாக மாறி பொழிவது ‘ஆலங்கட்டி மழை’ அல்லது ஐஸ் கட்டிமழை எனப்படுகிறது. சாதாரண மழையோடு ‘ஆலங்கட்டிகள்’ விழுவதை பார்த்திருக்கலாம். பெரும்பாலும் இவை முழுவதுமாக ஐஸ்கட்டிகளாக விழுவதில்லை.
ஆனால் நேற்று அமீரகத்தில் முதல்முறையாக ஒரு ‘கோல்ப்’ பந்து அளவில் ஐஸ்கட்டிகள் சடசடவென்று விழுந்தன. ஐஸ்கட்டிகள் விழுந்ததால் பயந்துபோன சிலர் ஒதுங்க இடம்தேடி ஓடி சென்றனர்.
இதனால் வாகனங்கள் சாலைகளில் செல்ல தடுமாறின. சிலமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. சாலையில் கிடந்த ஐஸ் கட்டிகளில் சிலர் விளையாடியும் மகிழ்ந்தனர்.