கார்த்தி சிதம்பரத்தின் தேர்தல் வெற்றிக்காக சுதர்சன நாச்சியப்பன் உள்பட அனைவரும் ஒன்றிணைந்து தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று திருநாவுக்கரசர் கூறினார்.
திருச்சி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் அறிவிக்கப்பட்டுள்ளார். இன்று திருச்சி தொகுதியில் போட்டியிட அவர் தேர்தல் அதிகாரியிடம் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
இதற்காக இன்று காலை ரெயில் மூலம் சென்னையில் இருந்து புறப்பட்டு திருச்சி ஜங்சனுக்கு வந்தார். அப்போது நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-
திருச்சி என்னுடைய சொந்த தொகுதி. நான் வெளியூர்க்காரன் அல்ல. திருச்சிக்கு அடிக்கடி வந்து செல்பவன். திருச்சி தொகுதியில் வெற்றி பெற்று மக்கள் பணியாற்றுவேன். திருச்சி தொகுதியில் தொழில் வளங்களை ஏற்படுத்தி வேலை வாய்ப்பை உருவாக்குவது தான் எனது முதல் பணி.
சிவகங்கை தொகுதியில் கார்த்திக் சிதம்பரத்தை வேட்பாளராக ராகுல்காந்தி அறிவித்துள்ளார். வேட்பாளராக அறிவிக்கப்பட்டபிறகு அவர் மீது தனிப்பட்ட விமர்சனம் செய்வது, குற்றச்சாட்டுகள் சுமத்துவது ஏற்புடையது அல்ல.
தனது அரசியல் வளர்ச்சியை தடுத்தது ப.சிதம்பரம் தான் என்று சுதர்சன நாச்சியப்பன் கூறியதும் ஏற்கத்தக்கதல்ல. எனவே கருத்து வேறுபாடுகளை மறந்து சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தின் தேர்தல் வெற்றிக்காக சுதர்சன நாச்சியப்பன் உள்பட அனைவரும் ஒன்றிணைந்து தேர்தல் பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.