இந்தியாவின் முதல் தேர்தலில் இருந்து தற்போது வரை வாக்களிக்கும் மூத்த வாக்காளர்!

279 0

இந்தியாவில் அனைத்து தேர்தல்களையும் சந்தித்த இந்தியாவின் முதல் வாக்காளர் குறித்த சுவாரஸ்ய தகவல்களைப் பார்ப்போம்.

பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் நாட்டின்  அனைத்து கட்சியினரும் வாக்காளர்களை கவர பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். முக்கிய அரசியல் தலைவர்கள் பொதுக்கூட்டங்கள், பிரச்சாரங்கள் என பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டு உரையாற்றி வருகின்றனர். குறிப்பாக வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்க தேர்தல் ஆணையமும், அரசியல் கட்சிகளும்  தீவிர களப்பணியாற்றி வருகின்றன.

இதேபோல் பொது மக்களும் தங்களுக்கான தலைவர்களை தேர்ந்தெடுக்கவும், ஆர்வத்துடன் வாக்களிக்கவும் தயாராகி வருகின்றனர். 

இந்நிலையில், இந்தியாவில் முதன் முதலாக தேர்தல் தொடங்கிய 1951ம் ஆண்டில் இருந்து, கடந்த தேர்தல் வரை நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் தவறாது வாக்களித்த மூத்த வாக்காளர் ஒருவர்,  வரும் பாராளுமன்ற தேர்தலிலும் வாக்களிக்க ஆர்வத்துடன் தயாராகி உள்ளார். 

இமாசலப்பிரதேசத்தின் கல்பா பகுதியில் 1917ம் ஆண்டு பிறந்தவர் ஷியாம் சரண் நேகி(102). இவர் கின்னாவூர் பகுதியில் பள்ளியின் ஆசிரியராக பணி புரிந்து, ஓய்வு பெற்றவர் ஆவார். இவருக்கு 3 மகன்களும், 5 மகள்களும் உள்ளனர். 

தற்போது தனது இளைய மகனுடன் கல்பா பகுதியில் வசித்து வருகிறார். கல்பா,  சிம்லாவில் இருந்து 275 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. வீட்டிலிருந்து வாக்குச்சாவடிக்கு செல்ல வாகன வசதி செய்யப்படுவதுமுண்டு.  இவர் இந்தியில் ‘சனம் ரே’ எனும் படத்தில் சிறப்பு வேடத்தில் நடித்தும் உள்ளார். 

தேர்தலில் வாக்களிப்பது குறித்து ஷியாம் கூறுகையில், ‘நாட்டை புதிய வளர்ச்சியின் உச்சத்திற்கு கொண்டு செல்ல நாட்டின் அனைத்து மக்களும், குறிப்பாக இளைஞர்கள் வாக்களிக்க நேரம் ஒதுக்கி, வாக்குகளை நேர்மையான மனிதருக்கு செலுத்துவது மிகவும் முக்கியமானதாகும்’ என கூறியுள்ளார்.  

மேலும் இவர் பிரதமர் மோடியின் வானொலி நிகழ்ச்சியான மன்கி பாத்தினை தவறாமல் கேட்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.