தற்போது ஆட்சி நடாத்தும் மைத்திரி-ரணில் அரசாங்கத்தை குறுகிய காலத்திலேயே ஆட்சியிலிருந்து கவிழ்ப்போம் என மகிந்த ராஜபக்ஷ சூளுரைத்துள்ளார்.
கூட்டு எதிர்கட்சியினர் நேற்று (8) இரத்தினபுரியில் நடத்திய பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய மஹிந்த ராஜபக்ச, ஆட்சி மாற்றமடைவதற்கு நீண்டகாலம் காத்திருக்க வேண்டியதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
அவரின் உரையில் தெரிவித்திருப்பதாவது,ஆட்சி மாற்றத்தை எதிர்பார்த்திருக்கும் நாட்டு மக்கள் அதற்காக நான்கு ஐந்து வருடங்கள் காத்திருக்க வேண்டியதில்லை என்று கூறியுள்ள மஹிந்த ராஜபக்ச, மக்களின் இந்த எதிர்பார்ப்பு விரைவில் நிறைவேறும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்காக அனைத்து முற்போக்கு சக்திகளையும் இணைத்துக்கொண்டு எதிர்கட்சியிலுள்ள கூட்டு எதிர்கட்சி, ஆளும் காட்சியாக ஆட்சி பீடம் ஏறும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதற்கு நாடாளுமன்றிலுள்ள உறுப்பினர்களின் பெரும்பான்மைப் பலத்தை தமது பக்கம் ஈர்த்துக்கொள்வது என்பது பெரிய விடயமல்ல என்று குறிப்பிட்டுள்ள மஹிந்த தேவைப்படின் ஓரிரு நாட்களிலேயே அதனை செய்துவிடுவேன் என்றும் சூளுரைத்திருக்கின்றார்.
அதேவேளை முதன்முறையாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் பெயரைக் குறிப்பிட்டு கடுமையாக விமர்சித்த மஹிந்த ராஜபக்ச, மைத்ரி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைத்து, சுதந்திரக் கட்சியின் தனித்துவத்தை அழித்துவிட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
போராட்டத்திற்கு உயிரூட்டும் புதிய மக்கள் சக்தி என்ற தொனிப்பொருளில் இரத்தினபுரியில் கூட்டு எதிர்கட்சி நடத்திய பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு தொடர்ந்தும் உரையாற்றிய மஹிந்த ராஜபக்ச,
”புதிய அரசியல் யாப்பின் ஊடாக நாட்டை பிளவுபடுத்த மைத்ரி – ரணில் அரசாங்கம் சதி செய்கின்றது.
இதற்கு இடமளிக்க முடியாது. படைவீரர்கள் தமது உயிர்களை தியாகம் செய்து ஒருங்கிணைத்த நாட்டை மீண்டும் பிளவுபடுத்த இடமளிக்கக்கூடாது. இந்த அரசாங்கத்திற்கு எதிராக அனைவரும் அணி திரள வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளார்.