8 மாத சிசுவுக்கு பாலூட்ட முன்வந்த 9 தாய்மார்!

289 0

சுமார் 10 மணித்தியாலங்களாக, பசியால் கதறிய சிசுவுக்கு ஒன்பது தாய்மார் பாலூட்டுவதற்கு முன்வந்த மனதை நெகிழவைக்கும் சம்பவமொன்று நல்லதண்ணியில் இடம்பெற்றுள்ளது. 

மத்துகமவைச் சேர்ந்த தாயொருவரின் எட்டுமாத சிசுவுக்கே, ஒன்பது தாய்மார்கள் இவ்வாறு, பாலூட்டுவதற்கு முன்வந்தனர். எனினும், நாவலப்பிட்டியைச் சேர்ந்த தாயொருவரே, அந்தச் சிசுவுக்கு பாலூட்டி பசியாற்றினார்.  

சம்பவம் தொடர்பில் நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லக்சிறி பெர்ணாந்து தெரிவிக்கையில்,  

சிவனொளிபாதமலைக்குச் செல்வதற்காக, தனது எட்டுமாத சிசுவுடன் வருகைதந்திருந்த தாய், அதிகளவிலான குளிர் நிலவியதால், தாம் சுற்றுலா வந்திருந்த பஸ்ஸிலேயே வைத்திருக்குமாறு, தன்னுடைய தாயாரிடம் குழந்தையை ஒப்படைத்துவிட்டு, மலைக்குச் சென்றுள்ளார்.    தாய், திரும்பி வருவதற்கு தாமதமானமையால், அந்தச் சிசு, பசியால் கதறியுள்ளது. என்ன செய்​வதென்று தெரியாத, அந்த பஸ்ஸிலிருந்த இன்னும் சிலர், அதுதொடர்பில் நல்லதண்ணி பொலிஸாரின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர்.  

அதையடுத்து, ஒலிபெருக்கியின் ஊடாக, விவரத்தை அறிவித்த பொலிஸார், தாய்ப்பாலூட்டும் தாய்மார்களின் உதவியைக் கோரிநின்றனர். அதையடுத்து, அந்தச் சிசுவுக்குப் பாலூட்டிப் பசியாற்றுவதற்காக, ஒன்பது தாய்மார்கள் முன்வந்துள்ளனர்.  

எனினும், அதற்கான பாக்கியம், நாவலப்பிட்டி பகுதியை சேர்ந்த சுனித்தா என்பவருக்கே கிடைத்துள்ளது.  

இந்நிலையில், விவரத்தை அறிந்து, மலையடிவாரத்துக்கு விரைந்து வந்த, சிசுவின் தாயிடம் விவரம் தெரிவிக்கப்பட்டு, குழந்தையும் ஒப்படைக்கப்பட்டது என்றும் ​பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.