மத்திய மாகாணத்திலுள்ள பாடசாலைகளுக்கு, முதன்மை நிலை தேர்ச்சியற்ற பதவிகள், முதன்மை நிலை அரைத் தேர்ச்சியுள்ள பதவிகளுக்கு, மத்திய மாகாண கல்வித் திணைக்களத்தால் விண்ணப்பங்கள் கோரப்பட்டு, நேர்முகப்பரீட்சையும் நிறைவடைந்துள்ளன.
தேர்ச்சியற்ற பதவிகளின் கீழ், பாடசாலை பணி உதவியாளர், காவல்காரர், உதவி சமையற்காரர் பதவிகளும், அரைத் தேர்ச்சியின் கீழ் சமையற்காரர் பதவியும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
மேற்குறிப்பிட்ட பதவிகளுக்கு மத்திய மாகாண பிரதான மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் ஆர்.எம்.பி.எஸ் ரத்நாயக்கவின் கையொப்பத்துடன் கூடிய அறிவுறுத்தலின் கீழ், 2018 ஓகஸ்ட் 18ஆம் திகதி விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன.
அதனடிப்படையில் விண்ணப்பித்திருந்தவர்களுக்கான நேர்முகப்பரீட்சைகள், பல்லேகலையிலுள்ள மத்திய மாகாண கட்டடத் தொகுதியில், மார்ச் 19,20, 21 ஆம் திகதிகளில் நடந்துமுடிந்துள்ளன எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், மத்திய மாகாணத்தின் கீழுள்ள தமிழ், சிங்கள மொழிமூலமான பாடசாலைகளுக்கு ஆட்களை சேர்த்துக்கொள்வதற்கான, மேற்படி நேர்முகத்தேர்வுக்கு, சிங்கள மொழிமூலமாக, 400 பேரும், தமிழ்மொழி மூலமான விண்ணப்பத்தாரர்களில் 143 பேர் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர் என்றும் அந்தத் தகவல்கள் தெரிவித்தன.
மத்திய மாகாணத்தைப் பொறுத்தவரையில், தமிழ்மொழி மூலமான பாடசாலைகள் 520க்கும் மேல் உள்ளன. அதில், ஆகக்குறைந்தது, ஒரு பதவிக்கு, தமிழர் ஓருவரையேனும் தெரிவு செய்திருந்தால், 520 தமிழர்களை நேர்முகத் தேர்வுக்கு அழைத்திருக்க வேண்டும்.
எனினும், வெறுமனே, 143 தமிழர்களை மட்டுமே அழைத்ததன் ஊடாக, ஏனைய வெற்றிடங்களுக்கு சிங்கள மொழிமூலமானவர்களைக் கொண்டு நிரப்பக்கூடுமென்ற ஐயம், நேர்முகப்பரீட்சைக்கு தோற்றிய, நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படாத தமிழ்மொழி மூலமான விண்ணப்பத்தாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
மேற்படி விவகாரம் தொடர்பில், பொறுப்புகூறவேண்டியவர்களை நேற்றைய தினம்(24) தொடர்புகொள்ள முயன்றபோதிலும், விடுமுறை நாள் என்பதால், உரிய தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை.
ஆகையால், மேலே குறிப்பிடப்பட்ட வெற்றிடங்கள் நிலவும் தமிழ்மொழிமூலமான பாடசாலைகளுக்கு தமிழ்மொழி மூலமானவர்களை நியமிப்பதற்கு உரியதரப்பினர் நடவடிக்கை எடுக்கவேண்டுமென, விண்ணப்பதாரிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
அவைதொடர்பில், பொறுப்புகூற வேண்டியவர்களுக்கு, மக்கள் பிரதிநிதிகள் அழுத்தங்களைக் கொடுக்கவேண்டுமெனவும் வலியுறுத்தியுறுத்துகின்றனர்.
எனினும், மேற்படி விடயங்களில் இறுதித் தீர்மானமெடுக்கும் அதிகாரம் மற்றும் குறித்த பதவிகளில் சிலவற்றை அல்லது முழுவதையும் நிரப்புதல் அல்லது நிரப்பாமல் விடுதல் தொடர்பான அதிகாரம் மத்திய மாகாண கல்வி அமைச்சின் செயலாளரைச் சார்ந்ததாகும் என அறிவுறுத்தலில் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.