பெருந்தோட்டத் தொழிலாளர்கள், இதுவரை காலமும் இலங்கையின் பொருளாதாரத்துக்கு வழங்கிய ஒத்துழைப்பை மறக்க முடியாது எனத் தெரிவித்துள்ள நிதி அமைச்சர் மங்கள சமரவீர, 2017ஆம் ஆண்டில், தேயிலை ஏற்றுமதியில் மாத்திரம் இலங்கையானது, 1,530 டொலர் பில்லியன்களை வருமானமாக ஈட்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.
மொத்த பொருளாதார வருமானத்தில், 13 சதவீதத்தைத் தொழிலாளர்கள் பெற்றுக்கொடுத்துள்ளனர் என்றும் எனவே, தொடர்ச்சியாக ஏற்றுமதிக்கான பங்களிப்பை, தொழிலாளர்கள் வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
பகத்சிங் மாதிரி கிராமத்தின் திறப்பு விழா, நேற்று (24) இடம்பெற்றபோது, அதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், தோட்டப் பகுதிகளில் வசிக்கும் இளைஞர், யுவதிகள் தோட்டங்களுக்குள் மட்டுப்படாமல், புதிய தொழில் முயற்சிகளை மேற்கொள்வதற்கான கடன் உதவிகளையும் அரசாங்கம் வழங்கவுள்ளதாகவும் 2018ஆம் ஆண்டுடன், இந்நாட்டில் தேயிலை உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டு 150 வருடங்கள் ஆகின்றன என்றும், அன்றுபோல் இன்றும், தேயிலை இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்குத் தூணாகவே உள்ளது என்றும் கூறினார்.
கடந்த காலங்களில், பெரும் நெருக்கடிக்கு மத்தியில் வாழ்ந்து வந்த தொழிலாளர்களுக்கு, தற்காலத்தில் சலுகைகள் வழங்கப்படுவதாகக் கூறிய அவர், முன்னைய காலங்களில், இந்தப் பகுதிகளில் எந்த அபிவிருத்தியும் முன்னெடுக்கப்படவில்லை என்றும் அமைச்சர் திகாம்பரத்தின் காலத்திலேயே, இந்தத் துரித மேம்பாட்டுத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
அதற்காகவே, மலையக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய என்ற புதிய அமைச்சும் உருவாக்கப்பட்டது என்றும் நீண்டகாலமாக வறுமையின் பிடியில் சிக்கி, லயன்களில் வசித்த மக்களுக்கு, புதிய வீடுகளை வழங்குவதற்கான திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது எனத் தெரிவித்தார்.
தற்போது வரையில் 5,000 வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. இன்னும் 2,000 வீடுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் இந்திய உதவியுடன் 14 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது என்றும் அவற்றில் 6,000 வீடுகளை விரைவில் மக்களுக்குக் கையளிக்க எதிர்பார்க்கப்படுகின்றது என்றும் அவர் மேலும் கூறினார்.