நல்லிணக்கம், நீதி மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான பிரச்சினையை தீர்க்க சரியான நேரத்தில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை தொடர்பாக இம்முறை பிரித்தானியா, ஜேர்மன், மசடோனியா போன்ற நாடுகள் கொண்டுவந்த 40/L/1 என்ற பிரேரணை எவ்வித திருத்தமின்றியும் வாக்கெடுப்பு நடத்தப்படாமல் நிறைவேற்றப்பட்டது
குறித்த தீர்மானம் தொடர்பாக, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பிரிவு வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “நல்லிணக்கம், நீதி மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான வாக்குறுதியை இலங்கை புதுப்பித்துக் கொண்டுள்ளதை நாங்கள் வரவேற்கிறோம்.
இந்தப் பிரச்சினைகளை தீர்க்க சரியான நேரத்தில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதன்மூலமே அனைத்து இலங்கையர்களுக்கும் அமைதியான, செழிப்பான எதிர்காலத்தையும் பெற முடியும்” என்று அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.