வடக்கு – கிழக்கில் பிரபாகரனின் பிடியிலிருந்த காணிகளை இராணுவத்தினர் தமது உயிரை பணயம் வைத்து மீட்டுள்ளனர். எனவே குறித்த காணிகள் இராணுவத்தினருக்கே சொந்த மாகும் என கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வீரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற காணி சுவீகரிப்புச்சட்ட கட்டளையை அங்கீகரிப்பது தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,யுத்த காலப்பகுதியில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள மக்களின் காணிகள் தமிழீழ விடுதலைப்புலி களின் தலைவர் பிரபாகரனின் பிடியிலேயே காணப்பட்டது. அவற்றிற்கு அக்காலப்பகுதியில் யாரும் உரிமை கோரவில்லை.
அவ்வாறான காணிகளை இராணுவத்தினர் பெரும் போராட்டத்திற்கு மத்தியில், தமது உயிரை பணயம் வைத்து கைப்பற்றி முகாம்களை அமைத்தனர்.
எனவே, பிரபாகரனின் பிடியிலிருந்த போது காணிகளுக்கு எவரும் உரிமை கோராத நிலையில், தற்போது இராணுவத்திடமுள்ள காணிகளுக்கும் யாரும் உரிமை கோர முடியாது. அவற்றை இராணுவத்தினர் விடுவிக்கவும் மாட்டார்கள் என தெரிவித்தார்.