தமிழ் மக்களுக்கு ஏற்ற தீர்வினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பெற்றுத் தராவிட்டால், கூட்டமைப்புக்குள் முரண்பாடுகள் நிச்சயமாகத் தோற்றம் பெறும் என ஈழ மக்கள் புரட்சிகர முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வு பெற்றுக்கொடுக்கப்படுமா என்ற கேள்விக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை பதில் சொல்லவேண்டிய நிலமைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழ் மக்களுக்கு ஏற்றவகையில் ஒரு தீர்வுத் திட்டம் வருமாயிருந்தால், கூட்டமைப்புக்குள் அங்கம் வகிக்கும் எந்தக் கட்சியும் குழப்பம் விளைவிக்காது. கூட்டமைப்பிற்குள் பல்வேறு முரண்பாடுகள் காணப்படினும், சரியான தீர்வு கிடைக்குமாயின் அதனை எவரும் எதிர்க்க வாய்ப்பில்லை.
வடக்குக் கிழக்கு இணைந்த சமஷ்டி ஆட்சி முறை ஏற்றுக்கொள்ளப்பட்டு அதனடிப்படையில் தீர்வு கிடைக்குமாயின் அதனை ஏற்றுக்கொள்ள தமிழ் மக்கள் தயாராக உள்ளனர். அவ்வாறில்லாமல் தமிழ் மக்கள்மீது தீர்வுத் திட்டத்தை திணிக்க முயல்வார்களாயின் நிச்சயம் மோதல் வெடிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.