சமூக வலைத்தளங்களின் செயற்பாடுகள் இன்று பாரியளவில் விமர்சிக்கப்பட்டு வருகின்றன. இனவாதத்தை தூண்டும் கருத்துக்களை பிரசுரிக்கும்போது அதனை கட்டுப்படுத்த எந்த சட்டமும் இல்லை.
ஆனால் ஜேர்மன் போன்ற நாடுகளில் இனவாதத்தை தூண்டும் கருத்துக்களை தெரிவிக்கும் சமூக வலைத்தளங்களுக்கு எதிராக சட்டம் இருக்கின்றது. அவ்வாறான ஊடக ஒழுங்கு பொறிமுறை ஒன்றை ஏற்படுத்துவதன் மூலமே ஒழுக்கமுள்ள ஊடக கலாசாரத்தை ஏற்படுத்தலாம் என பிரதி அமைச்சர் கருணாரத்ன பரணவிதாரண தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று சனிக்கிழமை இந்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் கைத்தொழில், வாணிப அலுவல்கள், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு மற்றும் வெகுசன ஊடகத்துறை பற்றிய அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சு மீதான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே தெரிவித்தனர்.
ஊடக சுதந்திரத்தை எமது அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த காலங்களில் ஊடங்கள் எதிர்கொண்ட நெருக்கடிகள் எதுவும் இன்று இல்லை. என்றாலும் ஊடகங்கள் பெற்றுக்கொண்ட சுதந்திரத்தை முறையாக பின்பற்றுகின்றதா என்ற சந்தேகம் இன்று இருக்கின்றது. ஊடகவியலாளர்கள் இன்று கடத்தப்படுவதில்லை. கொலை செய்யப்படுவதில்லை.
என்றாலும் ஊடகங்கள் தங்கள் கடமையை பொறுப்புடன் நிறைவேற்றுகின்றதா என்பதை சிந்தித்து பார்க்கவேண்டும். சமூக பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் நிலை ஏற்படவேண்டும். செய்திகளை முந்திக்கொண்டு நாங்கள் தெரிவிக்கின்றோம் என்று தெரிவிக்கும் ஊடகங்கள், பொறுப்புடன் நாங்கள் செய்திகளை வெளியிடுகின்றோம் என்று எந்த ஊடகமும் தெரிவிப்பதில்லை.
மேலும் ஊடக ஒழுக்கக்கோவை அமைக்கப்படவேண்டும் என்று நாங்கள் தெரிவிக்கும்போது, ஊடகங்களை கட்டுப்படுத்துவதாக பிரசாரம் செய்யப்படுகின்றது. இன்று அச்சு ஊடங்களுக்கு ஒழுக்கக்கோவை இருக்கின்றது. ஆனால் இலத்திரணியல் ஊடங்களுக்கு அது இல்லை. அவர்கள் சுயமாக தணிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். என்றாலும் இலத்திரணியல் ஊடகங்களின் ஒளிபரப்புகள் பொது மக்களின் ஜனநாயக உரிமையை பாதுகாக்கின்றதா என்ற கேள்வி எழுகின்றது.Share