பிரேத பரிசோதனை அறிக்கையை தரக்கோரிய ராம்குமார் தந்தையின் மனு வாபஸ்

389 0

201609301704416459_postmortem-of-ramkumar-will-be-conducted-tomorrow-at_secvpfராம்குமாரின் பிரேதப் பரிசோதனை குறித்த விவரங்களை தங்களிடம் தரக்கோரி அவரது தந்தை பரமசிவன் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு உயர் நீதி மன்றத்தில் வாபஸ் பெறப்பட்டது.

மென் பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருந்த ராம்குமார் கடந்த மாதம் மின் கம்பியை கடித்து தற்கொலை செய்து கொண் டதாக சிறைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இது திட்டமிட்ட கொலை என ராம்குமாரின் தந்தை பரமசிவன் கூறிவந்தார். இதனால் ராம்குமாரின் பிரேதப் பரிசோதனை அறிக்கை, புகைப்படங்கள் மற்றும் வீடியோ ஆதாரங்களை தங்களுக்குத் தரக்கோரி அவர் தாக்கல் செய்த மனுவை திருவள்ளூர் குற்றவியல் நடுவர் தள்ளுபடி செய்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பரமசிவன் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதி பொன்.கலையரசன் முன்பு நடந்தது. அப்போது இந்த விசாரணையை நீதிபதி என்.கிருபாகரனிடம் மாற்றக்கோரி, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ஆர்.சங்கரசுப்பு கோரிக்கை விடுத்தார். அதை ஏற்க மறுத்த நீதிபதி, ‘‘நீங்கள் கூறுவது போல இந்த வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற முடியாது. நீங்கள் வாதிடுங்கள். நான் கேட்க தயாராக இருக்கிறேன்’’ என்றார்.

அதையடுத்து ராம்குமாரின் பிரேதப் பரிசோதனை குறித்த அறிக்கை உள்ளிட்ட ஆவணங்களை தங்களிடம் தர உத்தரவிட வேண்டும் என ராம்குமார் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். அதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர் எமிலியாஸ், ‘‘இந்த விசாரணை இன்னும் முழுமையடையவில்லை. இந்த சூழலில் ராம்குமாரின் பிரேதப் பரிசோதனை குறித்த அறிக்கை களை மனுதாரரிடம் தர முடியாது’’ என ஆட்சேபம் தெரிவித்தார். அதையடுத்து நீதிபதி தீர்ப்பை பிற்பகலுக்கு தள்ளி வைத்தார்.

இந்நிலையில் நேற்று மாலை இந்த விசாரணையை நீதிபதி கிருபாகரனிடம் மாற்றுவது தொடர்பாக தலைமை நீதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்ல தலைமைப் பதிவாளரிடம் பரிந்துரைக் கடிதம் கொடுத்திருப்பதாகக் கூறிய ராம்குமார் தரப்பு வழக்கறிஞர், அந்த கடித நகலை நீதிபதி பொன்.கலையரசனிடம் கொடுக்க முயற்சித்தார். அதை அவர் ஏற்கவில்லை. இதனால் மனுவை வாபஸ் பெறுவதாக வழக்கறிஞர் ஆர்.சங்கரசுப்பு தெரிவித்தார். நீண்ட நேரம் வாதிட்ட பிறகு ஏன் மனுவை வாபஸ் பெற வேண்டும் என அதிருப்தி தெரிவித்த நீதிபதி, அதன்பிறகு மனுவை வாபஸ் பெற அனுமதித்தார்.