ஐ.பி.எல். போட்டிகளை பாகிஸ்தான் தொலைக்காட்சிகள் ஒளிபரப்ப தடை

272 0

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை தொடங்கும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை பாகிஸ்தான் தொலைக்காட்சிகள் ஒளிபரப்ப கூடாது என அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை தொடங்கும் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் முதல்நாள் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.
மே மாதம் நான்காம் தேதிவரை நடைபெறும் ஐ.பி.எல். லீக் போட்டிகளை உலக நாடுகளில் இருக்கும் கிரிக்கெட் ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்க்கும் நிலையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை பாகிஸ்தான் தொலைக்காட்சிகள் ஒளிபரப்ப கூடாது என அந்நாட்டு அரசு தடைவிதித்துள்ளது.

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் எங்கள் அணி வீரர்கள் விளையாடிய போட்டிகளை ஒளிபரப்ப இந்தியாவை சேர்ந்த பிரபல ஒளிபரப்பு நிறுவனம் மறுத்து விட்டது. 
இதை எல்லாம் சகித்துகொண்டு இருக்க முடியாது என்பதால் ஐ.பி.எல். போட்டிகள் பாகிஸ்தானில் ஒளிபரப்ப அனுமதிக்க மாட்டோம் என்று பாகிஸ்தான் தகவல் ஒளிபரப்புத்துறை மந்திரி பவாத் அஹமத் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
அரசியலையும் விளையாட்டையும் தனித்தனியாக பார்க்கவே பாகிஸ்தான் விரும்புகிறது. ஆனால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியின்போது (பாகிஸ்தானை சீண்டிப்பார்க்கும் வகையில்) இந்திய ராணுவ வீரர்கள் அணியும் தொப்பிகளுடன் விளையாடிய இந்திய கிரிக்கெட் வீரர்கள்மீது அந்நாட்டு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அந்நாட்டின் பிரபல செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த பவாத் அஹமத் சவுத்ரி குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தானில் இயங்கிவரும் ஜெய்ஷ் இ முகமது பங்கரவாத இயக்கத்தின் அதரவுபெற்ற பயங்கரவாதியால் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் சென்ற வாகனங்களின் மீது கடந்த 14-2-2019 அன்று நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்தனர்.
இதனால், நாடு முழுவதும் பாகிஸ்தானுக்கு எதிராக கொந்தளிப்பான நிலை ஏற்பட்டிருந்த வேளையில் பிப்ரவரி 14 முதல் மார்ச் 17 வரை நடைபெற்ற பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடரை ஒளிபரப்பும் இந்திய உரிமத்தை பெற்றிருந்த டிஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி அந்த தொடரின் ஒளிபரப்பை தடை செய்திருந்தது நினைவிருக்கலாம்.