மத்திய அரசின் தலையீடின்றி 58 ஆண்டுகளுக்குமுன் நதி நீர் பகிர்வு செய்துகொண்ட தமிழகம் கேரளம்

360 0

water_3038349fகாவிரியில் தண்ணீர் வருவது பிரச் சினை, பாலாற்றில் தடுப்பணை பிரச்சினை, முல்லை பெரியாறில் அணையே பிரச்சினை என தமிழகம் தண்ணீருக்காக தவிக்கும் நிலை உள்ளது. ஆனால், மத்திய அரசின் தலையீடு இன்றி மக்கள் நலனை முன்னிறுத்தி, 58 ஆண்டுகளுக்கு முன்னர் இரு பெரும் அரசியல் ஆளுமைகள் செயல்படுத்திய மாபெரும் திட்டம், இன்று 4 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு வாழ்வு அளிக்கிறது.

தமிழகம், கேரள மாநிலங்களின் கூட்டுத் திட்டமாக, ரூ.32 கோடி மதிப்பீட்டில் பல துணைத் திட்டங் களை உள்ளடக்கியது பரம்பிக் குளம் – ஆழியாறு பாசனத் திட்டம். கேரளாவில் உற்பத்தியாகி மேற்கு நோக்கி பாயும் ஆனைமலையாறு, சோலையாறு, பரம்பிக்குளம், பாரதபுழா ஆறுகள் மற்றும் அவற் றின் துணை ஆறுகளின் நீரை கிழக்குத் திசையில் திருப்பி, கேரளாவில் பாலக்காடு மாவட்ட மும், தமிழகத்தில் கோவை மாவட்ட மும் பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில், 1958-ம் ஆண்டு இத்திட்டம் தொடங் கப்பட்டது.

தமிழகத்துக்கு 30.5 டிஎம்சி நீரும், கேரளத்துக்கு 19.55 டிஎம்சி நீரும் பகிர்ந்துகொள்ள ஒப்புக்கொள்ளப் பட்டு, கடந்த 58 ஆண்டுகளாக இரு மாநிலங்கள் இடையே நதி நீர் பங்கீடு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இத்திட்டம் உருவானபோது, தமிழகத்தில் காமராஜர் தலைமை யில் காங்கிரஸும், கேரளாவில் ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் தலைமை யில் கம்யூனிஸ்டும் ஆட்சியில் இருந்தன. இரு வேறு கட்சிகள், கொள்கைகள் இருந்தாலும் மக்கள் நலனில் அக்கறை கொண்ட ஆளு மைகள். அதனால்தான், மத்திய அரசின் தலையீடு இல்லாமல், இரு மாநில அரசுகளுக்கு இடையே ஒரு நதி நீர் பங்கீட்டு உடன்பாட்டை உருவாக்க முடிந்தது என்பதுதான், திட்டத்தின் பெருமைக்குரிய விஷய மாக இப்போதும் கருதப்படுகிறது.

பணிகள் ஆரம்பம்

திட்டம் தொடங்கும் காலத்துக்கு முன்பு, இப்பகுதியில் 30 ஆண்டு களில் பெய்த மழையின் புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட்டு, ஓராண்டில் கிடைக்கும் மொத்த நீரின் அளவு மதிப்பீடு செய்யப்பட்டன. இத்திட்டத்தில் கிடைக்கும் நீரைத் தமிழகம், கேரளா மாநிலங்கள் பகிர்ந்துகொள்வது குறித்து, அரசியல் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் நிலையில் விரிவான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு, உடன்பாடு காணப்பட்டது.

இதையடுத்து, பரம்பிக்குளம் ஆற்றை திசை திருப்புவதற்காக ஒரு பள்ளத்தாக்கில் இருந்து மற்றொரு பள்ளத்தாக்குக்கு நீரோட்டத்தை மாற்றி, மலைகளில் நீண்ட சுரங் கங்கள் அமைக்கப்பட்டன. பிற 3 சிறிய நதிகளையும், பிரதான திட்டத்துடன் இணைப்பது இத் திட்டத்தின் நோக்கம்.

திட்டத்தின் 2-வது கட்டம் குறித்து பேச்சு நடத்த வேண்டியிருந்தது. இந்நிலையில், கேரளாவில் கம்யூ னிஸ்ட் ஆட்சி மாறி, காங்கிரஸ் ஆதரவுடன் பிரஜா சோசலிஸ்ட் கட்சி ஆட்சியில் இருந்தது. பட்டம் தாணுபிள்ளை முதல்வராக இருந் தார். இந்த அமைச்சரவையுடன், உடனடியாக உடன்பாடு காண முடியவில்லை. ஆனால், திட் டத்தைச் செயல்படுத்தவே இரு மாநிலங்களும் ஆர்வம் காட்டின.

இரு மாநிலங்களும் தண்ணீரை நியாயமாக பகிர்ந்துகொள்ள, பழைய ஆழியாறு திட்டமும் பரம் பிக்குளம் திட்டமும் ஒருங்கிணைக் கப்பட்டு ஒரு திட்டம் தயாரிக்கப் பட்டது. அதற்கு பரம்பிக்குளம் – ஆழியாறு திட்டம் (பிஏபி) என பெயரிடப்பட்டது. இரு மாநிலங் களும் அதை ஏற்றுக்கொண்டன. அப்போது, தமிழகத்தில் முதல்வ ராக காமராஜர் இருந்தார். கல்வி, சட்டம் மற்றும் நிதி அமைச்சராக இருந்த சி.சுப்பிரமணியம் முயற்சி யால் பரம்பிக்குளம் – ஆழியாறு திட்டத்தின் நீர் பகிர்வு உடன்படிக்கை சுமூகமாக நிறைவேறியது.

இத்திட்டப்படி, கோவை மாவட் டத்தில் சுமார் 70 ஆயிரம் ஏக்கர் புஞ்சை நிலங்களுக்கும், ஏற் கெனவே ஆழியாறு மூலமாக பாசனம் நடைபெற்று வந்த சுமார் 70 ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கும் தடையின்றி தண்ணீர் கிடைத்தது.

பரம்பிக்குளம், பெரும்வாரிப் பள்ளம், தூணக்கடவு, ஆழியாறு உட்பட 8 அணைகள், காண்டூர் கால்வாய், ஆழியாறு ஊட்டுக் கால்வாய், வேட்டைக்காரன்புதூர் கால்வாய் உட்பட 8 கால்வாய்கள், 6 மின் உற்பத்தி நிலையங்கள், 6 சுரங்கப் பாதைகள் என பிரம்மாண்டமாக உருவெடுத்து, இன்று ஆசியாவில் அதிக பாசன வசதி பெறும் பொறியியல் சாதனையாக இடம்பெற்றுள்ளது.