அரியானா மாநிலத்தின் 60 அடி ஆழ்துளை குழாய்க்குள் விழுந்த ஒன்றரை வயது குழந்தையை 36 மணிநேர போராட்டத்துக்கு பின்னர் மீட்பு படையினர் காப்பாற்றியுள்ளனர்.
அரியானா மாநிலத்தின் ஹிசார் மாவட்டத்தில் உள்ள பல்சமன்ட் கிராமத்தில் மூடாமல் விடப்பட்ட 60 அடி ஆழமுள்ள ஆழ்துளை குழாய்க்குள் நேற்று முன்தினம் (புதன்கிழமை) மாலை அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த ஒன்றரை வயது ஆண் குழந்தை தவறி விழுந்தது.தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஆழ்துளை குழாய்க்கு அருகாமையில் புதிதாக குழிவெட்டி அந்த குழந்தையை காப்பாற்றுவதற்காக இருநாட்களாக முயன்று வந்தனர்.
சுமார் 36 மணிநேர போராட்டத்தின் பலனாக அந்த குழந்தை இன்று மாலை உயிருடன் வெளியே எடுக்கப்பட்டது. தயாராக காத்திருந்த ஆம்புலன்ஸ் மூலம் அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அந்தக் குழந்தை அபாயகட்டத்தை கடந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.