யாசின் மாலிக் தலைமையிலான பிரிவினைவாத இயக்கத்துக்கு மத்திய அரசு தடை

352 0

காஷ்மீர் பிரிவினைவாத இயக்கத் தலைவர் யாசின் மாலிக்கின் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி இயக்கத்துக்கு மத்திய அரசு இன்று தடை விதித்துள்ளது. 

ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவில் இருந்து பிரித்து பாகிஸ்தானுடன் இணைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இம்மாநிலத்தில் உள்ள பல்வேறு குழுவினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில் சில அமைப்பினர் அரசுக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டங்களின் மூலம் பயங்கரவாதிகளாக செயல்பட்டு வருகின்றனர்.
அவ்வகையில், இயங்கிவரும் பிரிவினைவாத இயக்கங்களில் ஒன்றான ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி இயக்கத்துக்கு மத்திய அரசு இன்று தடை விதித்துள்ளது.

உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனை கூட்டத்துக்கு பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய உள்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.பிரிவினைவாதி யாசின் மாலிக் தலைமையிலான ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி இயக்கம் பயங்கரவாதிகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்துக்கொண்டு இந்தியாவில் வன்முறையை ஆதரித்தும் பிரிவினையை உருவாக்கும் காரியங்களையும் செய்து வருவதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.


தற்போது ஜம்முவில் உள்ள கோட்டா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி இயக்கம் தலைவர் யாசின் மாலிக் மீது 30 ஆண்டுகளுக்கு முன்னர் முன்னாள் மத்திய மந்திரி முப்தி முஹம்மது சையத் மகள் ருபயா சையத் கடத்தல் வழக்கு மற்றும் கொலை உள்பட 30-க்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 
யாசின் மாலிக் தலைமையிலான இயக்கத்துக்கு மத்திய அரசு விதித்துள்ள இந்த தடை காஷ்மீர் மாநிலத்தையே திறந்தவெளி சிறைச்சாலையாக மாற்றிவிடும் என அம்மாநில முன்னாள் முதல் மந்திரி மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.

யாசின் மாலிக் நீண்ட காலத்துக்கு முன்னரே வன்முறையை கைவிட்டு காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காணும் ஜனநாயக முறையிலான போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான முந்தைய மத்திய அரசின் சார்பில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்திய குழுவில் இடம்பெற்றிருந்த யாசின் மாலிக் இயக்கத்தின்மீது தடை விதிப்பதால் மத்திய அரசு என்ன சாதித்து விடப்போகிறது? எனவும் மெகபூபா கேள்வி எழுப்பியுள்ளார்.