நியூசிலாந்து நாட்டில் மசூதிகளில் துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் இன்று நடைபெற்ற ஜும்மா தொழுகையில் பிரதமர் ஜசிந்தா ஆர்ட்ரன் உள்பட பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.
நியூசிலாந்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள இரண்டு மசூதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெற்றபோது, மர்ம நபர்கள் திடீரென புகுந்து துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதில், 8 இந்தியர்கள் உள்பட 50 பேர் பலியாகினர். அமைதிப் பிரதேசமாக விளங்கும் நியூசிலாந்து நாட்டு மக்களை இந்த தாக்குதல் நிலைகுலைய வைத்தது.
இந்நிலையில், இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்த மசூதிகளில் ஒன்றான கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள நூர் மசூதி அருகேயுள்ள ‘ஹாக்லே பார்க்’ திறந்த வெளியில் இன்று வெள்ளிக்கிழமை (ஜும்மா) தொழுகை நடைபெற்றது.
இந்த தொழுகையில் தலையில் முக்காடு அணிந்து நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்ட்ரன் கலந்து கொண்டார். இதேபோல், மத வேறுபாடுகளை எல்லாம் கடந்து பல்வேறு துறை பிரபலங்கள், அரசு அதிகாரிகள் மற்றும் பல்லாயிரக்கணக்கான் பொதுமக்களும் பங்கேற்றனர்.
சாலையோரங்களில் ‘ஒலு’ செய்வதற்காக ஏராளமான குழாய்களை கிறிஸ்ட்சர்ச் நகர மாநககராட்சி அமைத்திருந்தது. கடந்தவார தாக்குதலில் பலியானவர்களுக்கு மவுன அஞ்சலிக்கு பின்னர் நடைபெற்ற இன்றைய ஜும்மா தொழுகையில் சுமார் 20 ஆயிரம் மக்கள் பங்கேற்றதாக நியூசிலாந்து ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.