கோயம்பேட்டில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்க சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்றிரவு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கோயம்பேட்டிற்கு அதிகாரிகளுடன் சென்று பஸ் போக்குவரத்தை கண்காணித்தார்.
மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு இன்று முதல் தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது.
ஆயுத பூஜை, விஜயதசமி, மொகரம் என அடுத்தடுத்து பண்டிகை கால விடுமுறை விடப்பட்டு இருப்பதால் பொது மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர்.
ரெயில்களில் இடம் கிடைக்காதவர்கள் அரசு பஸ்களை நம்பி செல்லும் நிலை உள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு அலுலகங்கள், பள்ளி, கல்லூரிகள் இன்று செயல்படுகின்றன. இன்று வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டு இருப்பதால் பெரும்பாலானவர்கள் நேற்றைய பயணத்தை தவிர்த்து இன்று வெளியூர் செல்கிறார்கள்.
இன்று பிற்பகல் முதல் கோயம்பேடு பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரிக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு வழக்கமாக செல்லும் அரசு பஸ்கள் தவிர சிறப்பு பஸ்களை இயக்கவும் போக்குவரத்து கழகங்கள் தயார் நிலையில் இருக்க அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அறிவுறுத்தியுள்ளார்.
எந்தெந்த பகுதிகளுக்கு மக்களின் கூட்டம் அதிகமாக இருக்கிறது என்பதை ஆராய்ந்து அதற்கேற்றவாறு பஸ்களை இயக்க போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து நீண்ட தூரம் செல்லும் அரசு விரைவு பஸ்கள் (எஸ்.இ.டி.சி.) வழக்கத்தை விட தேவைப்பட்டால் கூடுதலாக இயக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. விழுப்புரம், சேலம், கோவை, கும்பகோணம் போன்ற இதர போக்குவரத்து கழகத்தில் இருந்து கூடுதலாக பஸ்கள் கோயம்பேட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
மக்கள் நெரிசல் இல்லாமல் பயணம் செய்ய தேவையான அளவிற்கு அரசு பஸ்களை இயக்குவதற்கு தயார் நிலையில் போக்குவரத்து கழகம் உள்ளது.
நெரிசல் இல்லாமல் கோயம்பேட்டில் இருந்து பஸ்கள் வெளியே செல்லவும் உள்ளே வரவும் போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
எந்த பகுதிக்கு செல்ல மக்கள் அதிகளவு காத்திருக்கிறார்கள். பஸ் தேவைப்படுகிறது என்பதை கண்காணித்து சிறப்பு பஸ்கள் விட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் நேற்றிரவு கோயம்பேட்டிற்கு அதிகாரிகளுடன் சென்று பஸ் போக்குவரத்தை கண்காணித்தார். போக்குவரத்து துறை செயலாளர் சத்தியபிரதாப் சாகு, இணை ஆணையர் வீரபாண்டியன் மற்றும் நிர்வாக இயக்குனர்கள் இருந்தனர்.