வடகிழக்கு பருவமழை 20-ந்தேதி தொடங்கும் என்று எதிர்பார்ப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய துணை இயக்குனர் எஸ்.பி. தம்பி கூறியுள்ளார்.இந்திய தீபகற்பமானது தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை ஆகிய இரு பருவகாலங்களில் மழை பெய்கிறது. தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் செப்டம்பர் வரை ஆகும். கேரளாவில் தொடங்கி வடமாநிலங்களுக்கு பரவும். இந்த ஆண்டு தென் மாநிலங்களைக்காட்டிலும் வட மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை நன்றாக பெய்துள்ளது.
தென்மேற்கு பருவ மழை செப்டம்பர் மாதத்தில் இருந்து படிப்படியாக குறைந்து அக்டோபர் மத்தியில் விலகிக்கொள்ளும். அதன்பிறகு அக்டோபர் மத்தியில் வட கிழக்கு பருவமழை தொடங்கி டிசம்பர் வரை நீடிக்கும்.
தமிழகத்தைப் பொறுத்தவரை தென்மேற்கு பருவமழையால் கன்னியாகுமரி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள மாவட்டங்களில் நல்ல மழையும், மற்ற மாவட்டங்களில் லேசான மழையும் கிடைக்கும்.
வடகிழக்கு பருவமழையால் தான் 75 சதவீத அளவுக்கு தமிழகத்துக்கு மழை கிடைக்கும். இந்த காலங்களில் காற்றழுத்த தாழ்வு நிலைகள், புயல்களால் பெருமளவு மழை பெய்யும்.
‘எல் நினோ’ போன்ற பருவநிலை மாற்றத்தால் கடந்த ஆண்டு வட கிழக்கு பருவமழை 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்தது. ஒரே நாளில் 50 செ.மீ. மழை கொட்டியதால் சென்னை நகரம் மழை வெள்ளத்தில் மிதந்தது.
இந்த ஆண்டு வட கிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்று வானிலை அதிகாரிகள் கணித்து வருகிறார்கள்.
இந்த ஆண்டு பருவகால மாற்றத்தால் முன்கூட்டியே வட கிழக்கு பருவமழை தொடங்கும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியானது. இதுபற்றி சென்னை வானிலை ஆய்வு மைய துணை இயக்குனர் எஸ்.பி. தம்பி கூறுகையில், வட கிழக்கு பருவ மழை வருகிற 20-ந்தேதி தொடங்கும் என்று எதிர் பார்ப்பதாக தெரிவித்தார்.
தற்போது தென்மேற்கு பருவமழை படிப்படியாக குறைந்து வருகிறது. தென் மேற்கு பருவமழை முடிந்தது. வட கிழக்கு பருவ மழை தொடங்கிவிடும். அடுத்த 3 மாதங்களில் 40 செ.மீ அளவுக்கு மழை கிடைக்கும் வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு சராசரி மழை அளவு 48 சதவீதம் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதில் உள் மாவட்டங்களில் 40 முதல் 50 சதவீதமும், கடலோர மாவட்டங்களில் 60 சதவீதமும் இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.