சிரியாவில் உள்நாட்டுப் போர் உச்சகட்டத்தை எட்டியுள்ள சூழலுக்கு அமெரிக்காவும், ரஷியாவும் மாறிமாறி ஒருவர்மீது மற்றவர் பழிசுமத்திவரும் நிலையில் அணு ஆயுதங்களை சுமந்தபடி பாய்ந்து சென்று தாக்கவல்ல நவீன ஏவுகணைகளை காலினின்கிராட் பகுதிக்கு ரஷியா அனுப்பி வைத்துள்ளது.
சிரியாவில் கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து நீடித்துவரும் உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா – ரஷியா இடையே சுமுகமான தீர்வு எட்டப்படாத நிலையில் சுமார் இரண்டரை லட்சம் மக்கள் வசிக்கும் அலெப்போ நகரை போராளிகளிடம் இருந்து மீட்பதற்காக அரசுப் படைகள் அங்கு நுழைந்து ஆவேச தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், அணு ஆயுதங்களை சுமந்தபடி பாய்ந்து சென்று தாக்கவல்ல நவீன ஏவுகணைகளை காலினின்கிராட் பகுதிக்கு ரஷியா அனுப்பி வைத்துள்ளது.
போலந்து மற்றும் லிதுவேனியா நாடுகளுக்கு இடையில் ரஷியாவுக்கு சொந்தமான காலினின்கிராட் பகுதிக்கு அணு ஆயுதங்களுடன் சுமார் 500 கிலோமீட்டர் தூரம்வரை பாய்ந்து சென்று தாக்கக்கூடிய ‘இஸ்கான்டர்-எம்’ ரக ஏவுகணைகளை ரஷியா அனுப்பி வைத்துள்ளதாக அமெரிக்க உளவுப்படைகள் தகவல் வெளியிட்டுள்ளன.
சிரியா விவகாரத்தில் நேட்டோ படைகளின் போக்குக்கு அதிருப்தி தெரிவிக்கும் வகையிலும், தங்களது ஆயுத பலத்தை நிரூபிக்கும் விதமாகவும் இந்த நடவடிக்கையை ரஷியா மேற்கொண்டுள்ளதாக சர்வதேச போர்வல்லுனர்கள் குறிப்பிடுகின்றனர்.