நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாட்டால், ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச ரீதியாக இலங்கைக்கு நன்மதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான முஜிபூர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டிருந்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஜெனிவா விவகாரம் தற்போது இலங்கையின் பிரதான அரசியல் விடயமாக மாறியுள்ளது. நேற்று ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை தொடர்பில் கருத்து வெளியிட்ட வெளிவிவகார அமைச்சர், கலப்பு நீதிப்பொறிமுறைக்கு இடமளிக்க முடியாது என்று கூறியிருந்தார்.
அதேபோல், சர்வதேச நீதிபதிகளை அழைப்பதற்கான தேவையும் இலங்கை அரசாங்கத்துக்கு இல்லை என்று அவர் மனித உரிமைகள் ஆணையாளருக்கு பதில் வழங்கியிருந்தார்.
சர்வதேச ரீதியாக நாட்டுக்குக் கிடைத்துள்ள நன்மதிப்பின் காரணத்தினாலேயே இவ்வாறானதொரு கருத்தை வெளிவிவகார அமைச்சினால் கூறமுடியுமாக இருந்தது.
2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்ததையடுத்து, மஹிந்த ராஜபக்ஷ மேற்கொண்ட சில செயற்பாடுகளினாலேயே சர்வதேச அழுத்தங்களுக்கு இலங்கை முகம் கொடுக்க நேரிட்டது.
இது புதிய விடயமல்ல. இன்று நாம் மனித உரிமைகள் ஆணையாளருக்கு தகுந்த பதிலை வழங்கியுள்ளோம். மேலும், நல்லாட்சியின் செயற்பாட்டினாலேயே இராணுவத்துக்கு சர்வதேச ரீதியாக நன்மதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால்தான், ஐ.நா. அமைதிப்படையில் இலங்கை இராணுவம் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது. தற்போது, எமக்கு இன்னும் இரண்டு வருடகால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. உண்மையில், இது எமக்கான வெற்றியாகவே கருதப்படுகிறது” என முஜிபூர் ரஹ்மான் மேலும் குறிப்பிட்டுள்ளார்.