பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இனியும் தாக்குதல் நடத்தினால் இந்தியா கொந்தளித்து விடும் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பயங்கரவாதிகள் கார் குண்டு தாக்குதல் நடத்தியதில் 40 இந்திய துணை ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இதற்கு பதிலடியாக இந்திய விமானங்கள் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களை குண்டு வீசி அழித்தன. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதட்டம் ஏற்பட்டது.
அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் தலையீட்டால் சற்று அமைதி ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் அமெரிக்க வெள்ளை மாளிகை மூத்த அதிகாரி ஒருவர் இது சம்பந்தமாக கூறியிருப்பதாவது:-
இந்தியா – பாகிஸ்தான் இடையே மோதல் போக்கு உருவானதுமே அதிபர் டொனால்டு டிரம்ப் தலையீட்டு அமைதி நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாதிகளை ஒடுக்கும் படியும், அந்த மண்ணை பயங்கரவாதிகள் புகலிடமாக பயன்படுத்துவதை தடுக்கும் படியும் கேட்டுக்கொண்டார்.
அதன்படி சில நடவடிக்கைகளை பாகிஸ்தான் மேற்கொண்டுள்ளது. சில பயங்கரவாதிகள் கைது, அவர்களது சொத்துக்கள் முடக்கம் போன்றவற்றை பாகிஸ்தான் எடுத்தது.
ஆனாலும் இந்த நடவடிக்கை போதுமானவை அல்ல. பயங்கரவாதிகள் இயக்க தலைவர்கள் இன்னும் பாகிஸ்தானில் சுதந்திரமாக நடமாடும் நிலை உள்ளது. அதை பாகிஸ்தான் தடுக்க வேண்டும்.
பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இனியும் இந்தியாவுக்குள் தாக்குதல் நடத்தினால் இந்தியா கொந்தளித்து விடும். அது பெரிய பிரச்சனையாக மாறிவிடும். அதன் பிறகு அதை கட்டுக்குள் கொண்டு வருவது கடினமாக அமையும்.
எனவே ஜெய்ஷ்-இ- முகமது, லஷ்கர்- இ- தொய்பா போன்ற பயங்கரவாத இயக்கம் மீது இன்னும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இனியும் தாக்குதல் நடக்காது என்ற உத்தரவாதத்தை பாகிஸ்தான் ஏற்படுத்த வேண்டும்.
அங்கு என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதை அமெரிக்கா தொடர்ந்து கண்காணித்து வருகிறது. மேலும் இது பற்றி ஆய்வு செய்வோம். பாகிஸ்தானுக்கு அமெரிக்கா தொடர்ந்து அழுத்தத்தை கொடுக்கும். தெற்கு ஆசிய பகுதியில் அமைதி நிலவ வேண்டும் என்பது எங்கள் எண்ணமாகும். அதை நிறைவேற்ற அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.