கடந்த 2015ம் ஆண்டு ரோத்தக் பகுதியில் பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஐகோர்ட் உறுதி செய்தது.
அரியானா மாநிலம் ரோத்தக் பகுதியில், கடந்த 2015ம் ஆண்டு நேபாளத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை, அதே பகுதியைச் சேர்ந்த சிலர் கடத்திச் சென்றுள்ளனர். பின்னர் கூட்டாக பலாத்காரம் செய்து, அவரை செங்கற்களால் தாக்கி, கொடூரமாக கொலை செய்துள்ளனர்.
இச்சம்பவத்தில் 7 பேர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கை விசாரித்த ரோத்தக் கோர்ட், 2015ம் ஆண்டு குற்றவாளிகள் 7 பேருக்கும் மரண தண்டனை விதித்தது. தலா 50 ஆயிரம் அபராதமும் விதித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து குற்றவாளிகள் தரப்பில் பஞ்சாப் மற்றும் அரியானா ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கின் வாதப் பிரதிவாதங்கள் முடிவடைந்த நிலையில் நேற்று நீதிபதிகள் சவுதாரி , சுரேந்தர் குப்தா அடங்கிய அமர்வு தீர்ப்பு அளித்தது. இதில் அவர்கள் கூறியிருப்பதாவது:
இந்த குற்றத்திற்கு மரண தண்டனைகூட குறைவுதான். இந்த கொடூரமான செயலை அறிந்தபோதே மிகுந்த அச்சமும், அதிர்ச்சியும் அடைந்தோம். இந்த வழக்கில் அப்பெண்ணின் உடலில் ஏற்பட்ட காயங்களின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் விதம் மன ரீதியாக மிகவும் பாதித்தன. இது மிகவும் காட்டுமிராண்டி தனமாகும். மேலும் இந்த மிருகத்தனமான செயல், சுனாமியை விட மிக மோசமான விளைவுகளை அனவருக்கும் ஏற்படுத்த கூடியதாகும்.
எனவே, குற்றவாளிகளுக்கு ரோத்தக் நீதிமன்றம் அளித்த மரண தண்டனையை உறுதி செய்கிறோம். அதேசமயம் அபராத தொகை ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.50 லட்சமாக உயர்த்தப்படுகிறது. இந்த அபராத தொகையில் பாதி தொகை அரியானா அரசுக்கும், பாதி தொகை கொல்லப்பட்ட பெண்ணின் சகோதரிக்கு வழங்கப்பட வேண்டும்.
குற்றவாளிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்து, விற்பனை செய்து அபராத தொகையை செலுத்த வேண்டும் என ரோத்தக் துணை கமிஷனருக்கு உத்தரவிடுகிறோம். இந்த உத்தரவை நிறைவேற்றியது தொடர்பான அறிக்கையை ஜூலை 4ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.