சிறீலங்காவுக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள சுவிற்சர்லாந்து சபாநாயகர் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனைச் சந்தித்துள்ளார்.
சுவிற்சர்லாந்தில் அரசியல் தஞ்சம் கோரி நிராகரிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான ஈழத்தமிழர்களை சிறீலங்காவுக்குத் திருப்பி அனுப்பும் உடன்பாட்டில் கைச்சாத்திட்ட நிலையில் இச்சந்திப்பு இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றுள்ளது.
உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு சிறீலங்கா வருகை தந்துள்ள சுவிற்சர்லாந்து சபாநாயகர் கிறிஸ்டா மார்க் வெல்டர் இன்று சபாநாயகர் கருஜெயசூரியவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
சிறீலங்கா நாடாளுமன்றத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் இரு நாட்டு உறவுகள் தொடர்பாகவும், பதிய அரசியல் சாசன தயாரிப்புப் பணிகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சுவிற்சர்லாந்து சபாநாயகர், எதிர்கட்சித் தலைவரான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
சுமார் அரை மணி நேரம் நீடித்த இந்த கலந்துரையாடலின் போது, சுவிற்சர்லாந்தில் நடைமுறையிலுள்ள அரசியல் யாப்பு குறித்தும், சிறீலங்காவில் இடம்பெறும் புதிய அரசியல் சாசனத் தயாரிப்புப் பணிகள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பையடுத்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள இரா.சம்பந்தன், சுவிற்சர்லாந்து நாட்டில் மிகச் சிறந்த முறையில் தயாரிக்கப்பட்ட அரசியல் யாப்பு ஒன்று நடைமுறையிலுள்ளதாகவும், புதிய அரசியல் யாப்பு தயாரிக்கும்போது சுவிஸ் அரசியல் யாப்பும் கவனத்தில் கொள்ளப்படும் எனவும் வலியுறுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
இதேவேளை இன்றைய சந்திப்பின் போது ஆட்சி மாற்றத்தின் பின்னர் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் நிலமைகள் குறித்தும் கேட்டறிந்துகொண்டுள்ள சுவிற்சர்லாந்து சபாநாயகர், தமிழ் மக்களின் பிரதான பிரச்சனைகள் தொடர்பிலும் கேட்டறிந்துகொண்டார் எனவும் தெரிவித்துள்ளார்.