ரூ.9¾ கோடிக்கு ஏலம் போன பந்தய புறா!

336 0

“புறாக்களின் லூயிஸ் ஹாமில்டன்” என செல்லமாக அழைக்கப்படும் பந்தய புறா 1.25 மில்லியன் யூரோவுக்கு (இந்திய மதிப்பில் சுமார் ரூ.9 கோடியோ 75 லட்சத்து 13 ஆயிரம்) ஏலம் போனது. 

பெல்ஜியம் நாட்டின் மேற்கு பிளாண்டர்ஸ் மாகாணத்தை சேர்ந்த ஜோல் வெர்ஷெட் (வயது 63) என்பவர் பந்தய புறா ஒன்றை வளர்த்து வந்தார். அர்மாண்டோ என பெயரிடப்பட்ட இந்த புறா, தொடர்ந்து 3 பந்தயங்களில் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது.

5 வயதே ஆன அர்மாண்டோ “புறாக்களின் லூயிஸ் ஹாமில்டன்” என செல்லமாக அழைக்கப்படுகிறது. லூயிஸ் ஹாமில்டன் இங்கிலாந்தை சேர்ந்த கார் பந்தய வீரர் என்பதும், இவர் 5 முறை ‘பார்முலா ஒன்’ பந்தயத்தில் உலக சாம்பியன் பட்டம் வென்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் புறாவை ஏலத்தில் விடும் ‘பிபா’ எனப்படும் இணையதள நிறுவனம் அர்மாண்டோவை சமீபத்தில் ஏலத்தில் விட்டது. இதில் வரலாறு காணாத வகையில் 1.25 மில்லியன் யூரோவுக்கு (இந்திய மதிப்பில் சுமார் ரூ.9 கோடியோ 75 லட்சத்து 13 ஆயிரம்) ‘அர்மாண்டோ’ ஏலம் போனது.

சீனாவை சேர்ந்த இருவர் அதி சிறந்த இந்த பந்தய புறாவை ஏலத்தில் எடுத்தனர். தற்போது ஓய்வுக்காலத்தில் மகிழ்ச்சியாக இருக்கும் அர்மாண்டோவை அதன் புதிய உரிமையாளர்கள் இனப்பெருக்கத்துக்காக பயன்படுத்துவார்கள் என தெரிகிறது.