மஹிந்தவின் கூற்று நீதிமன்றை விமர்சிக்கும் செயல்-ரஞ்சன்

317 0

வசீம் தாஜுதீனின் தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ் தெரிவித்திருக்கும் கூற்றானது நீதிமன்ற தீர்ப்பை விமர்சிக்கும் செயலாகும் என இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், 

ராஜபக்ஷ் குடும்பத்துக்கு எதிராக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் தற்போது பொய்ப்பிக்கப்பட்டு வருகின்றன என்றும் அதில் பிரதான குற்றச்சாட்டாக இருந்தது வசீம் தாஜுதீனின் கொலை என்றும் மஹிந்த ராஜபக்ஷ் தனியார் ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார். 

அத்துடன் தாஜுதீன் செலுத்திவந்த வாகனம் மணித்தியாலத்துக்கு 175 கிலோமீட்டர் வேகத்தில் வந்ததாகவும் அதில் இருந்த நபர் தப்புவதாக இருந்தால் அது ஆச்சரியமாகவே இருக்கவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ்வின் இந்த கூற்றானது இதுவரை காலமும் தெரிவிக்கப்படாததொன்றாகும். நாரஹேன்பிட்டி பார்க் வீதியில் மணித்தியாலத்துக்கு 175 கிலோ மீட்டர் வேகத்தில் நைட்ரேஸ் காருக்கும் செல்ல முடியாது. 

அத்துடன் வசீம் தாஜுதீன் சம்பவம் ஒரு கொலை என நீதிமன்ற தீர்ப்பொன்று இருக்கும் நிலையில் மஹிந்த ராஜபக்ஷ், இது விபத்து என்று தெரிவிப்பது நீதிமன்ற தீர்ப்பை விமர்சிப்பது போலாகும் என்றார்.