நாளொண்றுக்கு ஒரு இலட்சம் பீப்பாய் எண்ணெயைச் சுத்திகரிக்கும் நிலையமொன்றை இந்தியாவின் உதவியுடன் திருகோணமலையில் நிறுவவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள சிறிலங்காவின் பெற்றோலியக் கூட்டுத் தாபனத் தலைவர் ரி.ஜி.ஜெயசிங்க, இந்திய எண்ணெய் நிறுவனத்துடன் இணைந்து திருகோணமலையில் நிறுவப்படவுள்ள புதிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையானது ஏற்றுமதியை நோக்காகக் கொண்டே அமையும் எனவும் தெரிவித்துள்ளார்.
குறித்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை நிறுவ நான்கு ஆண்டுகள் எடுக்கும் எனவும் அவர் ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளார்.
எண்ணெய் சேமிப்பதற்கான எண்ணெய்க் குதங்கள் அங்கே ஏற்கனவே உள்ளன. பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் அங்கே 99 எண்ணெய் குதங்கள் நிறுவப்பட்டுள்ளன. அதில் 15 குதங்களை இந்தியன் எண்ணெய் நிறுவனத்தின் துணை நிறுவனமான லங்கா ஐஓசி பயன்படுத்தி வருகிறது.
லங்கா ஐஓசி நிறுவனம், 2001ஆம் ஆண்டு சீனக்குடாவிலுள்ள எண்ணெய்க் குதங்களை 30 ஆண்டு குத்தகைக்கு எடுத்திருந்தது. தற்போது பயன்படுத்தாமல் உள்ள 84 எண்ணெய்க் குதங்களை புனரமைப்பதற்கு அந்த நிறுவனத்திடம் சிறிலங்கா அரசாங்கம் கேட்டுள்ளது.
உலகின் இரண்டாவது ஆழமான இயற்கைக் துறைமுகமான திருகோணமலையை எரிபொருள் கேந்திரமாக உருவாக்க இந்தியா உதவும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு உறுதிஅளித்திருந்தார்.
சிறீலங்காவில் தற்போது ஒரேயொரு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமே சப்புகஸ்கந்தையில் இயங்கி வருகின்றது. இங்கே ஐம்பதினாயிரம் எண்ணெய் பீப்பாய்கள் மாத்திரமே சுத்திகரிக்கமுடியும்.
அத்துடன், இங்கே ஈரானிய மசகெண்ணெய் மாத்திரமே சுத்திகரிக்கப்படுகின்றது. ஐநா ஈரானிற்கு தடைவிதித்த காலப்பகுதியில் சிறீலங்கா வெளிநாடுகளிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயையே வாங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் உதவியுடன் திருகோணமலையில் அமைக்கப்படவிருக்கும் இரண்டாவது எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கு ஏற்படும் செலவுகள் இன்னமும் மதிப்பிடப்படவில்லை என்று சிறிலங்காவின் பெற்றோலியத்துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.
அதேவேளை சம்பூரில் அமைக்கத் திட்டமிட்டிருந்த 500 மெகாவாட் மின் திட்டத்தை, இயற்கை எரிவாயு மின் நிலையத் திட்டமாக மாற்றுவதற்கும் இந்தியா இணங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், சிறிலங்காவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தினை நிறுவுவதற்கு கடந்த ஓகஸ்ட் மாதம் சீனாவும், அமெரிக்காவும் விருப்பம் தெரிவித்திருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.