முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்கான வதியிடம் மற்றும் தொழிற் பயிற்சி நிலைய திறப்பு விழா

381 0

mullanthandu_save_act_83f26ஒரு மனிதனை நிமிர்ந்து நிற்கவைக்கும் செயற்பாட்டை செய்வதும் இடுப்புக்கு கீழே உள்ள உணர்வுகளை சுமந்து செல்வதும் முள்ளம் தண்டும் முள்ளந்தண்டு வடமுமே.

போரின் அனர்த்ததால் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட எம்மவர்கள் உறவினர்களால் ஒதுக்கப்பட்ட நிலையின் தமது வாழ்வாதாரத்தை எவ்வாறு நடத்த முடியும் என்று வழி தெரியாது நிற்கின்றார்கள். முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டு இருப்பதால் இயற்கை உபாதைகளும் அதன் சிக்கலும் பாரிய நெருக்கடியை இவர்களுக்கு ஏற்படுத்துகின்றது.

அதுதவிர எப்போதும் படுத்த படுக்கையாக இருக்கும் இவர்களின் முதுகுப்பகுதி மிகவும் மோசமாக பாதிக்கப்படுவதால் படுக்கை புண்ணும் ஏற்படுவதுடன் அதனால் ஏற்படும் தொற்றுக்களும் அதிகரித்தே செல்கின்றது.

போரின் மூலம் ஏற்பட்ட காயவடுக்கள் காரணமாக அங்கவீனமானோர்களின் எண்ணிக்கை மீள்குடியேற்றப்பட்ட இடங்களில் அதிகரித்துக் காணப்படுகின்றது. குறிப்பாக அதிகமானோர் இரண்டு கால்களும் இன்றி, கைகள் இன்றி கண்கள் இன்றி காணப்படுகின்றனர். இவ்வாறான அவசியமான அங்கங்களை இழந்து காணப்படுவதனால் மனவடு நிலைக்கு உள்ளாக்கப்பபட்டுள்ளனர்.

இதனால் தாம் தமது செயற்பாடுகளை சுயமாக மேற்கொள்ள முடியவில்லை என்ற ஏக்கம் அவர்களிடையே காணப்படுகின்றது. சிலருக்கு தம் இழந்த அங்கங்கள் தமக்கு இருப்பது போன்ற உணர்வுகளைக் கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கு இந்த பாதிப்பினை ஏற்படுத்திய யுத்த காட்சிகளை இன்னும் ஞாபகத்தில் கொண்டு அதனை கூறக்கூடியவர்களாக இருக்கின்றனர். இதனால் அழுகை, பயம் போன்ற உணர்வுகளுடன் உள்ளனர். இவர்கள் இழந்த அங்கங்களுக்கான செயற்கை அங்கங்கள் இதுவரை வழங்கப்படாமையினால் வழங்கியிருந்தும் ஆனால் போதியளவில் கிடைக்காமையினால் உள அழுத்தம் அதிகரித்துக் காணப்படுகின்றது.

இத்தகையவர்கள் எதிர்காலம் பற்றிய நம்பிக்கை இன்றிக் காணப்படுகின்றர். இவர்களுக்கு தொழில் செய்ய முடியாமை குடும்ப பொறுப்புக்கள் அதிகரித்தல், சுயமாக எவ்விதமான வேலைகளிலும் ஈடுபட முடியாமையினால் மனவருத்தத்துடன் கூடியவர்களாக காணப்படுகின்றனர். அத்துடன் தன்னம்பிக்கை இழந்தவர்களாகவும் காணப்படுகின்றனர்.இவர்களுக்கு உதவும் நோக்குடன்
குறுகிய சிந்தனை மிக்க நபர்களில் இருந்து மாறுபட்டு அனைவரையும் சம மனிதராக நேசிக்கவேண்டும் என்ற நோக்கில், சேவை மனப்பாங்கு நிறைந்த பலர் ஒன்றிணைந்து புலம்பெயர் வாழ் மக்களின் நிதியுடன் முள்ளந்தண்டு பாதிக்கபட்ட எம்மவர்களுக்கான ஒரு இல்லத்தை திறந்து வைக்கின்றார்கள் . இந்த இல்லத்தின் பணியாக முள்ளம் தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொழில் பயிற்சியுடன் கூடிய தங்குமிட வசதியை செய்து கொடுப்பதுடன் இவ்வாறானவர்களின் நம்பிக்கையையும் அதிகரிக்க சிறந்த மனப்பயிற்சியும் வழங்க இருக்கின்றார்கள். அனைத்து ஈழம் சார் வாழ் தமிழ் உறவுகள் இந்த நிகழ்வுக்கு வருகை தருவதுடன் முடிந்தவர்கள் உங்களால் முடிந்த உடல் உதவியையும் வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றார்கள் ஏற்பாட்டாளர்கள்.

போரின் இழப்பில் தம் அவயங்களை இழந்தமனிதர்களை  நாம் கவனிக்க தவறுவதுடன் தேவையற்ற சில உல்லாச நிகழ்வுகளையும் விளையாட்டுப்போட்டிகளையும் நடத்தி மகிழ்கின்றோம். இப்படியான தவறுகளை களைவதற்கு நாம் ஆவன செய்ய வேண்டும்.இந்த சந்தர்ப்பத்தை அதற்காக பயன்படுத்துவோம். மனிதராக நிமிர்வோம்.

mullanthandu_save_act_83f26

mullanthandu_save_act-2_58bb0

mullanthandu-save-act-3